கோவை,

கோவை போத்தனூர் பகுதியில் ஊருக்குள் புகுந்து 4 பேரை மிதித்துகொன்று சூறையாடிய காட்டு யானை, மயக்கஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

கோவையை பரபரப்பாக்கிய, காட்டுயானை 8 மணி நேர கடும் போராட்டத்திற்கு பின்பு பிடிபட்டது.

கோயம்புத்தூர் , போத்தனூர் அருகே உ ள்ள பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக சுற்றி வந்த ஒற்றை காட்டுயானை இன்று அதிகாலை, வெள்ளனூர் பகுதிக்குள் புகுந்தது.

இந்த யானை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த காயத்திரி, வெள்ளலூர் கிராமத்தைச் சேர்ந்த நாகரத்தினம், ஜோதிமணி, பழனிசாமி ஆகிய நான்கு பேரை மிதித்துக் கொன்றது. மேலும் மூன்று பேர் காயமடைந்தனர்.

ஆக்ரோஷமாக திரிந்த அந்த காட்டு யானையை பிடிக்க, வனத்துறையினர் கும்கி யானையை வரவழைத்தனர். ஆனால், காட்டுயானை கட்டுக்குள் வராமல் சுற்றி வந்தது.

இதையடுத்து யானையை மயக்கஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதையடுத்து யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதன் காரணமாக மயக்கமடைந்த யானையை புல்டோசர் மற்றும் கும்கி யானை உதவியுடன் காட்டு யானையை லாரியில் ஏற்றி பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பில் உள்ள வரகழி முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

காட்டு யானையைப் பிடித்ததன் மூலம் 8 மணி நேரப் போராட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.