சிவகங்கை:
“ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்” என்று விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்த அகழ்வாராய்வு பணிகள் குறித்து அறிய அங்கு இன்று வருகை தந்தார் தே.மு.தி.க. தலைவரும் நடிகருமான விஜயகாந்த்.
அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அரசியலுக்கு ரஜினி வருவது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்” என்று தெரிவித்தார்.
மேலும் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. நான்கு வருட ஆட்சி காலத்தை எப்படி கடத்துவது என்பது குறித்தே அதிமுகவின் இரு அணிகளுக்குள் மோதல் நடக்கிறது. ஒரு ஓட்டில் மூன்று முதல்வர்கள் ஆள்வது தமிழகத்தில்தான் நடக்கும்” என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் பாஜக காலூன்ற நினைப்பது குறித்து என்ன நினைக்கிறீ்ர்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, “இதற்கு நாஞ்சில் சம்பத் அளித்த பதில்தான் நினைவுக்கு வருகிறது” என்று விஜயகாந்த் தெரிவித்தார்.
“கால் இருந்தால்தானே காலூன்ற முடியும்” என்று பாஜக குறித்து நாஞ்சில் சம்பத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.