போபால்:
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே நேற்று காலை திடீரென காலமானார். அவரது உடல் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. ‘‘தனது இறப்புக்குப்பின் தன்னுடைய உடலுக்கு ஹோசங்காபாத் மாவட்டத்தின் பந்த்ராபனில், நர்மதை நதிக்கரையில் எளிமையாக இறுதிச் சடங்குகள் செய்ய வேண்டும்’’ என அனில் மாதவ் தவே உயில் எழுதி வைத்திருந்தார்.
அதன்படி அவரது உடல் இறுதிச் சடங்குகளுக்காக இன்று பந்த்ராபன் நர்மதை நதிக்கரையில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டது. பின்னர் முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர்கள், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கலந்து கொண்டனர்.