கோத்தகிரி,

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில்  சாமியார் ஒருவர் கேரளாவில்  கைது செய்யப்பட்டார். அடுத்தடுத்து கொலை, கைது என்று கொட நாடு கொலை தொடர்பான விசாரணை வளையம் விரிவடைந்து வருவது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் காவலாளியை கொலை செய்துவிட்டு, வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது. இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை குறித்த மர்மம் எப்போது விலகும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

பொலிரோ ஜீப்பில் வந்த கொள்ளையர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணை யில் தெரிய வந்தது.  அதைத்தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

ஆனால், விசாரணையின்போதே, கொள்ளை சம்பவத்துக்கு தொடர்புடைய ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் விபத்தில் மரணமடைந்தார்.

கொள்ளைக்கு உறுதுணையாக இருந்த ஜெயன் என்பவர் கேரளாவுக்கு தப்பி ஓட முயற்சித்தபோது, விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மனைவி, குழந்தை விபத்தில் பலியானது.

இது தமிழகத்தில் பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே,  திருச்சூரைச் சேர்ந்த சத்தீஷ், திபு, சந்தோஷ், உதயகுமார் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள்  குன்னூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும்,  கேரள மாநிலம் மலப்புரம் அருகே கைது செய்யப்பட்ட ஜிதீன் ஜோய், ஜெம்சீர் அலி ஆகிய 2 பேர், மஞ்சேரி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மனோஜ் சாமியார்

விசாரணை தொடர்பாக கேரளாவை சேர்ந்த பலர் கைதாகி வருகிறார்கள். இந்த நிலையில் சாமியார் மனோஜ் போலீசார் பிடியில் சிக்கியிருக்கிறார்.  அவரை பிடித்த கோத்தகிரி போலீசார் தீவிர விசாரணை  செய்து வந்தனர்.  மனோஜுக்கும் பின்னாலும் யார் உள்ளனர் என்ற கோணத்திலும் விசாரணை தீவிரமாக்கப்பட்டுள்ளது.

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில்,11 பேர் ஈடுபட்டனர் என்று  போலீசார் கூறி வருகின்றனர். இதுவரை 9 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் விபத்தில் மரணம், மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள மனோஜ் என்பவர்  கோவை கேரளா பார்டர் பகுதியான வாளையாறு பகுதியை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இவரும் இந்த கொள்ளை சம்பவத்தில் வரும் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. அவரை கொடநாடு அழைத்துச்சென்று போலீசார் விசாரித்தனர்.

 

கைது செய்யப்பட்ட மனோஜ் சாமியாரிடம் 3 மணி நேரம்  தீவிர விசாரணை நடைபெற்றது. அவர் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது. அதைத்தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மே 15ந்தேதி சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கோவை பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாகவும், அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்த இருப்பதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

மேலும் இந்த கொலை வழக்கில் சசிகலா குடும்பத்தினருக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் குறித்து சசிகலாவிடம் விசாரணை நடத்தப்படலாம் என்றும் உறுதிப்படாத தகவல்கள் கூறுகின்றன.