டில்லி,
தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகள் வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது: நீதிபதி கர்ணன் திடீர் தடை தடை விதித்து உள்ளார்.
இது நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த நீதிபதி கர்ணன், சென்னையில் வேலை பார்த்தபோது, தன்னுடன் பணி யாற்றிய சக நீதிபதிகள் ஊழலில் ஈடுபடுகிறார்கள் என்று மத்திய அரசுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதைத்தொடர்ந்து அவர் கல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததுடன் கோர்ட்டில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது.
கடந்த மார்ச் 10ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி கேஹர் மற்றும் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர், பினாகி சந்திரகோஸ், குரியன் ஜோசப் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கர்ணனுக்கு எதிராக ஜாமினில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மேற்குவங்க மாநில காவல் துறைத் தலைவர் அந்த வாரண்டை கர்ணனிடம் அளித்து, அவர் உச்சநீதிமன்றத்தில் மார்ச் 31-ம் தேதி ஆஜராக நடவடிக்கை எடுக்கு மாறு உத்தரவிட்டது.
இது மேலும் பரபரப்பை உருவாக்கியது. பதவியில் உள்ள ஒரு உயர்நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக இவ்வாறு கைது வாரண்ட் பிறப்பிக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் கூறப்பட்டது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதி கர்ணன், சுப்ரீம் கோர்ட்டிற்கு எதிராக உத்தரவு பிறப்பிப்பேன் என அதிரடியாக கூறினார்.
மேலும், தான் தலித் என்பதால் தன் மீது இப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இந்த உத்தரவைப் பிறப்பித்த நீதிபதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கர்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன பெஞ்சுக்கு நீதிபதி கர்ணன் எழுதிய கடிததத்தில் தனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காகவும், பொது மக்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியதற்காகவும் இழப்பீடாக ரூ.14 கோடி தர வேண்டும் என்றார்.
அதைத்தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மற்றும் 7 நீதிபதிகள் 28-ந்தேதி (நேற்று) தன் முன் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி கர்ணன் உத்தரவிட்டார்.
இந்நிலையில் தற்போது புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகளுகள் வெளிநாடு செல்ல தடை என நீதிபதி கர்ணன் உத்தரவிட்டு உள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விசாரணைக்கு தன்முன் ஆஜராகாததால் அவர்கள் மீண்டும் வருகிற 1-ந்தேதி ஆஜராக வேண்டும். அத்துடன் தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகளும் வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது என்று விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
8 நீதிபதிகள் மீதான புகார்கள் மிகவும் மோசமானது. சாதிய ரீதியிலானது, இது சட்டப்படி தண்டனைக்குரியது என்றும் நீதிபதி கர்ணன் தனது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.
நீதிபதி கர்ணனின் அலம்பல் உத்தரவுகள் இந்திய நீதித்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.