நியூஸ்பாண்ட்:

ருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதில் இருந்தே, “பிரேக்கிங் நியூஸால்” தமிழகம் வதைபடத் துவங்கியது.

அதுவும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தொடர்ந்து, “பிக் பிரேக்கிங் நியூஸ்”தான்.

வாக்காளர்களுக்கு தலா 4000 ரூபாய், தேர்தல் ரத்து, தேர்த் ஆணையருக்கு தினகரன் லஞ்சம் கொடுத்தாதக புகார், விசாரணை…

இப்போது நேற்றிரவு தினகரன் கைது!

முன்னதாக, சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.1.30 கோடி பணம் கைப்பற்றப்பட்டது.

விசாரணையில், சுகேஷ் சந்திரசேகர், “இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி தினகரன்தான் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க என்னை அனுப்பினார்” என்று அவர் கூறியதாக டில்லி போலீஸ் தெரிவித்தது. அதோடு,   விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று டில்லி போலீஸார் சென்னை வந்து தினகரனுக்கு சம்மன் கொடுத்துச் சென்றார்கள்.

இதையடுத்து, ஏப்ரல் 22ஆம் தேதி டில்லி சென்றார் தினகரன். அவரிடம் டில்லி போலீசார் விசாரணை நடத்தினர்.  முதல்கட்ட விசாரணையில் சுகேஷ் சந்திரசேகரை யாரென்றே தெரியாது என்று தினகரன் சத்தியம் செய்தார்.

ஆனால், டில்லி போலீஸார் தினகரனும் சுகேஷ் சந்திரசேகரும் பேசிய செல்போன்  ஆடியோவை போட்டுக்காட்டினர். அதிர்ந்துபோன தினகரன்,  சுகேஷ் சந்திராவை தான் நேரில் சந்தித்ததை ஒப்புக்கொண்டார். அதோடு தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு  லஞ்சம் கொடுக்க முயன்றதையும் ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில் நான்காவது நாளாக நேற்று ஏப்ரல் 25ஆம் தேதி தினகரனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியது டில்லி போலீஸ்.

விசாரணை முடிவில் இரவு 10.00 மணியளவில் அவரைக் கைது செய்தது.

இந்த வழக்கில் தினகரனுடன் அவரது நண்பர் மல்லிகார்ஜூணா,அவரது உதவியாளர் ஜனார்த்தனன் ஆகியோரும் கைது செய்யப்பட்டார்கள்.

நேற்றைய விசாரணையில் ஜனார்த்தனன் சில முக்கிய தகவல்களை கூறியதாகவும், அதன் அடிப்படையிலேயே தினகரன் கைது செய்யப்பட்டார் என்றும் டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரவு பத்து மணிக்கே இவர்கள் கைது செய்யப்பட்டாலும், நள்ளிரவு 12 மணிக்குத்தான் இந்த தகவலை வெளியே சொன்னது டில்லி போலீஸ்.

ஆனால் பத்து மணிக்கே, தமிழக அரசுக்கு டில்லி போலீஸ் தகவல் அளித்துவிட்டது. காரணம், சில நாட்களுக்கு முன் தினகரனை டில்லி போலீசார் விசாரிப்பதை எதிர்த்து தீக்குளிக்க முயன்றார் அவரது ஆதரவாளர் ஒருவர். அது போன்ற அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்பதே இதற்குக் காரணம்.

இதையடுத்து  இரவோடு இரவாக சென்னை மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில்  காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியது தமிழக அரசு.

இந்த கைது குறித்து  டில்லி வட்டாரங்களில் பேசப்படுவது இதுதான்:

“என்று தினகரன் துணைப் பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டாரோ அப்போதில் இருந்தே மத்திய உளவுத்துறை அவரை கண்காணிக்கத் துவங்கிவிட்டது. அவரது நடமாட்டங்கள் மட்டுமின்றி செல்போன் உரையாடல்களையும் பதிவு செய்து வந்தது உளவுத்துறை.

அதோடு  தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூணா, தனது செல்போனில் பேசியவைகளும் பதிவு செய்யப்பட்டு வந்தது.

இதற்கிடையே தினகரன்,  ராம்விலாஸ் பாஸ்வானின் மகனுடன் செல்போனில் உரையாடியதும் பதிவானது.

இந்த பதிவுகள் அனைத்தும் தினகரனுக்கு எதிரான முக்கிய ஆதாரங்கள்” என்கிறது டில்லி வட்டாரம்.இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தை கையில் எடுக்க தயாராகி வருகிறது.

சமீபத்தில் உ.பி. மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்காளர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டினார். அதாவது, எந்த வேட்பாளருக்கு வாக்களித்தாலும் அது பாஜக வேட்பாளருக்கு செல்லும்படியாக தில்லுமுல்லு செய்யப்பட்டிருந்தது என்றார் இதே குற்றச்சாட்டை சமாஜ்வாடியின் அகிலேஷ் யாதவும் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில்தான் தினகரன் விவகாரம் வெடித்திருக்கிறது. அவர் தேர்தல் ஆணைய அதிகரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முனைந்தது… அதாதவது.. தேர்தல் ஆணைய அதிகாரிகள் சிலர் லஞ்சம் வாங்க தயாராக இருந்தது…  நிரூபிக்கப்பட்டால்,  “உ.பி.தேர்தலில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாற்றம் செய்திருக்கலாம்” என்று குற்றம்சாட்ட காங்கிரஸ் தயாராகி வருகிறது.

மேலும், தினகரன் விவகார்ததில்  பாஜக அரசில் மத்திய  அமைச்சராக பொறுப்பு வகிக்கும் ராம்விலாஸ் பாஸ்வான் மகனுடைய பெயரும் அடிபடுவதால் இதனை பாஜகவுக்கு எதிராக முக்கியி பிரச்சினையாக்க  காங்கிரஸ் திட்டமிட்டிருக்கிறது.

இதற்கிடையே தினகரனை ஜாமீனில் எடுக்க வெளியே கொண்டுவர,  அவரது ஆதரவாளரகள் முயற்சி செய்து வருகிறார்கள்.

“இந்த வழக்கில் டில்லி போலீசார், இதுவரை தேர்தல் ஆணைய அதிகாரிகள் எவரிடமும் விசாரணை நடத்தவில்லை. ஆகவே உள்நோக்கத்துடனே இந்த கைது நடந்திருக்கிறது என்பதைச் சொல்லி ஜாமீன் பெறுவோம்” என்கிறார்கள் அவர்கள்.

இந்த நிலையில், “தினகரனுக்கு அடுத்தபடியாக மத்திய பாஜக குறிவைத்திருப்பது விவேகமான மருத்துவர்” என்று ஒரு தகவல் பரவி, மன்னார்குடி குடும்பத்தினரை திகிலில் உறைய வைத்திருக்கிறது.