மீண்டும் எழுமா தனித்தமிழ்நாடு கோஷம்: அத்தியாயம் -3
வான் புகழ் கொண்ட வள்ளுவர் தனது வெருவந்த செய்யாமை அதிகாரத்தில்…
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்
“கடுமையான மொழிகளைக் கூறுதலும் – ஓரவஞ்சனை யோடு அளவுக்கு அதிகமாக மக்களைத் துன்புறுத்துதலும், அரசனின் கோட்டைக் கதவங்களை அறுக்கும் அரம் ஆகும்” என்கிறார்.
காவிரித் தண்ணீரின் பங்கு – மீனவர் நல்வாழ்வு – விவசாயிகள் கடன் தள்ளுபடியும் – மறு வாழ்வும் – பொய்த்த மழைக்கான நிவாரணம் – இவைகளுக்கான தீர்வுகள் சர்வ நிச்சயமாக மத்திய அரசின் கையில்தான் இருக்கிறது. இவைகளைத் தள்ளிப் போட்டுக் கொண்டேயிருப்பது மட்டுமன்றி, ஆறாத புண்ணில் ஆஸிட்டை ஊற்றுவது போல “திராவிடத்தையே அழிப்போம்” என்னும் கடுமொழி தமிழர்களை வெறுப்பேற்றியிருக்கிறது !
தமிழகத்தைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல், எந்தவிதமான தமிழகக் கோரிக்கைகளை யும் காதில் வாங்காமல், மக்களை மேலும் மேலும் துன்பத்தில் ஆழ்த்துவதன் மூலம் ஆட்சிக்கு எதிரான ஓர் சலிப்பை ஏற்படுத்துவதுதான் மத்தியில் ஆள்வோரின் நோக்கம் என்று மக்கள் எண்ணு மளவுக்கு தமிழக பாஜகவினரின் நடவடிக்கைகள் இங்கே இருக்கிறது. அதை மேலும் வலுப்படுத்து வது போல அவர்களது பேட்டிகளும் இருக்கிறது .
தமிழ்நாட்டை இதுவரை ஆண்ட மாநிலக் கட்சிகளின் மேல் மக்களுக்கு அதிருப்தி இருப்பது உண்மைதான். அந்த அதிருப்தியை அதிகமாக்கி விடுவதன் மூலமே தங்களுக்கான வாய்ப்பு பிரகாசமாகிவிடும் என்று பாஜக எண்ணுமானால் அது அரசியல் அபத்தம் ஆகிவிடும் !
இன்னொருவர் மீதான அதிருப்தி, நமக்கான நற்சான்றிதழாகாது ! மாநிலக் கட்சிகளை உடைக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு மக்கள் நலத் திட்டங்களுக்கான கதவுகளை இறுக்கி மூடிக்கொண்டிருப்பதால்… மக்களின் கோபம் உள்ளூர மூண்டெழுந்து கொண்டேயிருக்கிறது என்பதை அவர்கள் உணர வேண்டும். அது, சரியாக ட்யூன் செய்யப்படுமானால், மத்திய அரசை நோக்கி சீறிப் பாய்ந்து விடும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும் !
தமிழகத்தை இதுவரை ஆண்டவர்களை விட தாங்கள் மேலானவர்கள் என்று பாஜக நினைத்தால், அதை அவர்கள் நேர்வழியில் நின்றுதான் உணர்த்த வேண்டும். அப்போதுதான் மக்களின் மனதில் இடம் பெற முடியும். இல்லையென்றால் என்னவாகும் என்பதுதான் இந்தக் கட்டுரை அடிக்கும் அலாரம் ஆகும்.
திராவிடக் கட்சிகள் சினிமாவை அரசியலுக்குள் கொண்டுவந்து சீரழித்து விட்டது என்று குற்றம் சாட்டும் பாஜக, ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் என்ன செய்திருக்கிறது. சுமாரான சினிமாக் காரரான கங்கை அமரனைத் தானே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
அவரென்ன மெத்தப் படித்தவரா…? சமூகப் போராளியா…? நின்று நிதானித்துப் பேசும் பக்குவம் கொண்டவரா…? அடக் குறைந்த பட்சம் பாஜகவின் கொள்கைகளுக்காக தன் சொத்து சுகங்களை துறந்தவரா…? எதுவுமேயில்லையே…!!? கோடம்பாக்கத்தில், பத்தோடு பதினொன்றாய் உழன்றவர் என்பதைத் தவிர அவரிடம் வேறு என்னதான் இருக்கிறது..?
அந்த சினிமாக்காரரிலும், ஒரு இளைஞராகப் பார்த்துப் பேசி மடக்கிப் போட முடியவில்லையே ? ஆய்ந்து ஓய்ந்த வயதில், உத்தரத்து சுவற்றில், பல்லி வேட்டையை ரசித்துக் கொண்டி ருந்த ஒரு வயதானவரைப் பிடித்துக் கொண்டு வந்து நிறுத்தி, வீதி வீதியாக சினிமாப் பாட்டு பாட சொல்லித் தானே வாக்கு கேட்கிறார்கள்..!!
படித்த – ஒழுக்கமான – சமூக சிந்தனையாளர் ஒருவரை நிறுத்தி இதோ பாருங்கள் எங்களின் மாற்று அரசியலின் ஆரம்பத்தை என்று சொல்லியிருந்தால் சரி..? அப்படியில்லையே…?
பின்பு, எந்த அருகதையை வைத்துக் கொண்டு திராவிடத்தை சாடுகிறார்கள்…? எந்த நியாயத்தின் அடிப்படையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஆட்சி போக வேண்டும் என்கிறார்கள்…? எந்த தார்மீகத்தின் மேலேறி நின்று கொண்டு திராவிடக் கருத்தியல் என்பது ஒழிக்கப்பட வேண்டியது என்கிறார்கள்…? திராவிடத்தை தாண்டிய அவர்களின் சிந்தனைதான் என்ன..?
அப்படி ஒன்று உண்டெனில், அந்த தங்கக் கோட்பாட்டை மக்களிடம் சொல்லி அதற்கு அவர்களின் ஏகோபித்த அங்கீகாரத்தைப் பெற்று விட வேண்டியதுதானே..? எதற்கு இவ்வளவு அதிகார துஷ்பிரயோகங்கள் !? இன்று ஆர்பாட்டமாக பேட்டிக் கொடுப்பவர்களில், பொன்னார் என்பாரைத் தவிர வேறு யாரும் மக்களின் வாக்குகளைப் பெற்று எம்.எல்.ஏ வாக இருப்பவர்கள் கூட இல்லையே…?
“எல்லா சொல்லும் பொருள் மாட்டே…” என்பது தொல்காப்பிய சூத்திரம் ! பொருளற்ற எந்த வார்த்தையும் முனை மழுங்கிய பூமராங்காகத்தான் திரும்பும். தமிழக பாஜகவினர், இப்படி மனம் போன போக்கில் தப்பாட்டம் ஆடிக் கொண்டிருந்தால் என்னவாகும்…? திராவிடக் கட்சிகளை அடியோடு அழிப்போம் என்கிறார்களே…? கொஞ்சம் யோசித்துப் பார்த்தார்களா…?
திராவிடப் பிண்ணனி கொண்ட, அதிமுக – திமுக – மதிமுக – தேமுதிக – வி.சிக்கள் இவர்களோடு கூட கம்யூனிஸ்ட்டுகள் மற்றும் சிறுபான்மை கட்சிகள் என மொத்தமும் சேர்த்தால் அதன் விழுக்காடு 80 ஐத் தாண்டி விடும். திராவிடக் கட்சிகளை எதிர்த்தாலும் – அதற்கு சமமாக பாஜகவையும் எதிர்க்கும் பாமகவின் வாக்கு வங்கியும் இதில் இணைந்தால் அது 90 ஐக் கடந்து விடும். நடு நிலையாளர்களும் ஒன்றிணைந்தால் பாஜகவின் சவாலுக்கு எதிரான வாக்கு வங்கி 95 ஐ எட்டிவிடும்.
நம்மை மதிப்பதும் இல்லை. நமக்கு உதவுவதும் இல்லை. ஓரவஞ்சனை யோடு நம்மை புறக்கணிப்பது மட்டுமின்றி, தங்களது அதிகாரத்தின் பெயரால் நமது கருத்தியலையே அழித்து விடுவதாகவும் பகிரங்கமாக சவால் விடுகிறார்களே என்று ஆவேசப்பட்டு, தமிழக பாஜகவுக்கு எதிராக இந்த 95 சதவிகிதமும் கொந்தளித்தால் என்னவாகும்…?
தேசியத்தின் பெயரால் நமது தன்மானத்தை நசுக்கப் பார்க்கிறார்கள் என்று ஒட்டு மொத்த தமிழகமும் முறுக்கிக் கொள்ளுமானால் என்னவாகும்…?
தமிழகத்தின் அபயக் குரல் இந்தியாவைக் கடந்து எழக் கூடும். அப்படி ஒரு அபயக் குரல் எழுமானால், அது சீனாவின் அரசியல் காதுகளில் சுநாதமாக ஒலிக்கக் கூடும். இந்தியா, இலங்கைக்கு தண்ணீர் டாங்கியும் – அரிசியும் கொடுத்ததாமே..? அது போல நாமும் தமிழகத்துக்கு ஏதாவது கொடுத்தால் என்ன என்று சீனாவும் நினைக்கக் கூடும்தானே…?
ஏற்கெனவே நமது மண்ணின் மீதும் நமது அழகிய கலாச்சாரத்தின் மீதும் சீனாவுக்கு ஒரு கண் உண்டு. போதாததற்கு, தமிழகம் பூகோள ரீதியாக தென்கடைக் கோடியில் கடலோரப் பிரதேசமாக வேறு அமைந்திருக்கிறது. அப்படி ஒரு நிலை வந்தால், இங்கே இருக்கும் கம்யூனிஸ்டுகள் நான்கு கால்களில் ஓடோடிச் சென்று கப்பலில் ஏறி கையசைத்து அழைக்க மாட்டார்களா..?
சீனா, தானாக உள்ளே நுழைந்தால் தான் அது, சர்வதேசப் பிரச்சினை யாக உருவெடுக்கும். ஆனால், தமிழகத்தில் இருந்து தாமாக முன் வந்து தன்னை நோக்கி ஒரு குரல் வருமானால், தன் வல்லமை கொண்டு அதை சகல வழிகளிலும் உலக அரங்கில் நியாயப்படுத்தி உள்ளே புகுந்து விடவே பார்க்கும் .
சீன மக்கள் நல்லவர்கள். ஆனால் சீன அரசியல் வேறு மாதிரியானது. தனக்கு நன்மை பயக்கும் என்றால் எதையும் செய்யும் மனோபாவம் சீனாவுக்கு உண்டு. ஆகவே, தேவையற்ற அழுத்தங்களினால் தமிழகத்தை சீனாவின் பக்கம் பிதுக்கி அனுப்பிவிடக் கூடாது. தேசபக்தியில் மற்றவர்களுக்கு சற்றும் சளைக்காத தமிழர்களின் மனதில் நஞ்சு கலக்காமல் இருப்பது நல்லது !
முடிவாக நாம் சொல்லக் கூடியது, மோடி அவர்களின் ஒற்றை பிம்பத்தை மட்டும் வைத்துக் கொண்டு எதையும் சாதித்து விடலாம் என்னும் மாரீச மாயையிலிருந்து முதலில் அந்தக் கட்சி விடுபட வேண்டும். அவரைப் போல பொறுமையோடும், நீண்ட கால திட்டங்களோடும், அயராது உழைக்க தமிழக பாஜக முன் வந்தே ஆக வேண்டும். திராவிட சிந்தனைகளை முன்வைத்த அரசியல்வாதிகளில் ஒரு சிலர் தவறிழைத்திருக்கலாம் அதற்காக, ஒட்டு மொத்த கருத்தியலையும், திராவிட சிந்தனையாளர்களையும் அழித்து விடுவோம் என்றெல்லாம் வெளிப் படையாக பேசுவதை, அவ்வாறு செயல்படுவதை உடனடியாக நிறுத்தச் சொல்லி பாஜக தலைமை அறிவுறுத்த வேண்டும்.
இங்கிருக்கும் தமிழக பாஜகவினர் மோடி அவர்களின் கொள்கைகளை எடுத்து சொல்வதைவிட, அவர் பெயரை சொல்லி தங்களை வளர்த்துக் கொள்வதிலேயே குறியாக இருக்கின்றனர் என்றே மக்கள் கருதுகின்றனர். தமிழக பாஜக தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மறைமுக அஜெண்டா இருப்பது மக்களுக்கே தெரியும் வகையில் நடந்து அவர்கள் அரசியல் முதிர்ச்சியற்று நடந்து கொள்கின்றனர்.
இதையெல்லாம் பாஜக உடனடியாக சீர் செய்ய வேண்டும். தமிழகத்தில் நிம்மதியானதோர் ஆட்சி நடக்க ஒத்துழைக்க வேண்டும். தமிழகத்துக்கு சேர வேண்டிய சகல உரிமைகளையும் தடையின்றி வழங்க முன் வர வேண்டும். மற்ற மாநிலங்களுக்கு ஓர் நீதி, தமிழகத்துக்கு ஓர் நீதி என்ற தோற்றம் வராதபடிக்கு பரிபாலனம் செய்ய வேண்டும். ஆண்டுக்கு இரண்டு முறையேனும் மோடி இங்கே வந்து மக்களுக்கான உரையை நிகழ்த்த வேண்டும். எல்லாவற்றுக்கும் முன்பு தமிழக பாஜகவை சீர் திருத்த வேண்டும். இப்படியெல்லாம் செய்து விட்டால் மக்கள் மனம் பாஜகவுக்கு சாதகமாக காலப் போக்கில் தானாகவே கனியும்.
இனியும் கண்டு கொள்ளாமல் மேலும், மேலும் புழக்கடை அரசியலை நோக்கி காய் நகர்த்திக் கொண்டேயிருந்தால், ஒற்றுமைக்கு ஓர் நாடு இந்திய என்னும் பெயரை நாம் இழக்க நேரிடும்.
“எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்” என்னும் பாரதியின் உணர்ச்சிமிகு வரிகள், “சொல்லொடு சொல்” மோதிக் கொள்ளும் ! ஓவென்று அலறி மார்பில் அறைந்து கொண்டு அழுது புரளும் !
தேசிய கீதத்தை இசைக்கும் இசைத்தட்டு “திராவிட உத்கல…” என்னும் வரிகளை சமீபிக்கும் போது சுழல மறுத்து, மனம் கலங்கி சபிக்கும் !
தமிழகம் இல்லாத இந்திய வரைபடத்தை சற்று மனக் கண்முன் நிறுத்திப் பாருங்கள்…! அது, இடது காலை இழந்த முடவனைப் போல தோற்றமளிக்கும் !
சீனா வல்லரசாகும் என்று சொன்ன, மாஸிடோனியாவின் தீர்க்கதரிசி பாபா வான்காவின் ஆதரவாளர்கள், இதுவரையான தங்களது ஆய்வில் அவரது ஒட்டு மொத்த தீர்க்க தரிசனத்துக்கான “பாசிப்பிலிட்டி” 85 % என்கிறார்கள் !
மீதமிருக்கும் 15 % ட்டில் இந்தக் கட்டுரையின் அச்சம் அடங்கிப் போகட்டும் ! அதற்கு, எல்லாம் வல்ல பாரத மாதா அருள் புரியட்டும் ! அதுவரை, பாரத மாதாவுக்கு வாய்த்த சில அவசரப் பூசாரிகள் கொஞ்சம் அடக்கி வாசிக்கட்டும் !!
வரையாடு, வரைபடத்தை தாண்டாமல் இருக்கட்டும் !!
ஜெய் ஹிந்த் !!
(முற்றும்)
https://patrikai.com/again-arise-a-separate-country-tagline-in-tamilnadu-niyohi/
https://patrikai.com/bjps-wrong-root-celebration-of-china-niyohi/