சென்னை:

டிகர் சரத்குமார் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இன்று மாலை அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

அவரது அணி மாறுதல் ‘துக்ளக்’ தர்பாரைபோல உள்ளது என்றும், அவர் நேரத்திற்கு நேரம் மாறும் பச்சோந்தி என்றும் அவரது கட்சியினரே கூறி வருகின்றனர்.

ஜெ.மரணத்தை தொடர்ந்து ஆர்.கே.நகரில் வரும் 12ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக இருஅணிகளாக களமிறங்கி உள்ளது.

இதனிடையில் சமத்துவமக்கள் கட்சி தனித்து போட்டியிடும் என்று சரத்குமார் அறிவித்துவிட்டு, தனது கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் அந்தோணி சேவியரை வேட்பாளராக அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து அவருடன் சென்று வேட்புமனுவையும் தாக்கல் செய்தார். ஆனால், அவரது கட்சி வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டது.

அப்போதே இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

தனது கட்சி வேட்பாளருடன் வேட்பு மனு தாக்கல் செய்தபோது

இந்நிலையில் சரத்குமாரின் அரசியல் வாழ்க்கை குறித்து பார்த்தோமானால், அவரது அரசியல் துக்ளக் தர்பாரை போல உள்ளது தெரிய வரும்.

1996ம் ஆண்டு தி.மு.கவில் இணைந்த சரத்குமார் 1998ம் ஆண்டு நடைபெற்ற  நாடாளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். பின்னர் அவரை திமுக  2002ல்  மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கியது.

அதைத்தொடர்ந்து அக்கட்சியில் இருந்து விலகி 2006ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். பின்னர் அதிமுகவில் இருந்து வெளியேறினார்.

அதைத்தொடர்ந்து 2007 ஆகஸ்டு மாதம்  அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை துவக்கினார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற  சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இரட்டை இலை சின்னத்தில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். முதன்முறையாக எம்எல்ஏவாக சட்டசபைக்குள் நுழைந்தார்.

பின்னர் கடந்த தேர்தலின்போது தனித்து போட்டி என்று அறிவித்தார். பின்னர் வேறுவழியின்றி ஜெ.வை சந்தித்து திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.

இந்நிலையில் ஜெ.மரணம் அடைந்ததை தொடர்ந்து அதிமுக இரண்டாக உடைந்தது. அப்போது முன்னாள் ஓபிஎஸ்-ஐ சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்தார்.

ஆனால், ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தனித்து போட்டி என்று களமிறங்கினார்.

ஆனால்,  இன்று டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்னர்  ஆர்.கே. நகரில் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தருவதாகவும்,   மேலும்  தினகரனுக்கு ஆதரவாக ஆர்.கே .நகரில் நாளை முதல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக ‘வும் தெரிவித்தார்.

சரத்குமாரின் அரசியல் ‘துக்ளக்’ தர்பார் போல் உள்ளதாக அவரது கட்சியினர்  கூறி உள்ளனர். மேலும்  அரசியல் விமர்சகர்களும் சரத்குமாரின் அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இதுகுறித்து அவரது கட்சியை சேர்ந்த வடசென்னை நிர்வாகி ஒருவர் கூறும்போது,

அரசியலுக்கு லாயக்கற்றவர் சரத்குமார் என்றும், பணத்துக்காக பச்சோந்தியாக மாறி உள்ளார் என்றும் கடுமையாக விமர்சித்தார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் நாடார் சமூகத்தவரின் ஓட்டுக்கள் அதிக அளவில் உள்ளது. அந்த ஓட்டுக்களை பிரிக்க நினைத்த டிடிவி தினகரனின் ஆசை வார்த்தைக்கு மயங்கி தற்போது பச்சோந்தியாக மாறி அரசியல் அநாதையாகி விட்டார் என்று கூறினார்.