லக்னோ:
மாணவிகளை நிர்வாணப்படுத்தி மாதவிடாய் சோதனை நடத்திய சம்பவம் உ.பியில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் முஜாஃபர் நகர் மாவட்டத்தில், கதெளலி என்ற இடத்தில், மாணவிகள் தங்கிப் படிக்கும் கஸ்தூரிபாய் உறைவிடப்பள்ளி உள்ளது. கடந்த 29ம் தேதி, பள்ளிக்கு அருகே மாதவிடாய் காலத்துல் பயன்படுத்தப்பட்ட நாப்கின்கள் சில வீசி எறியப்பட்டிருந்தன.
யார் இப்படி வீசியது என்பது குறித்து மாணவிகளிடையே சர்ச்சை ஏற்பட்டது. அப்போது விடுதி கண்காணிப்பாளரான சுரேகா தோமர் என்ற பெண்மணி, அங்கிருக்கும் எழுபது மாணவியரையும் வரிசையாக நிற்கவைத்து, நிர்வாணப்படுத்தி மாதவிடாய் சோதனை நடத்தியிருக்கிறார்.
மாணவிகள் சிலர் இதை தங்கள் பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளனர். இதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சம்பவம் உண்மை என்று தெரியவந்ததை அடுத்து விடுதி கண்காணிப்பாளர் சுரேகா தோமரை இடைநீக்கம் செய்யப்பட்டார்.
கதெளலி பகுதி காவல்துறை அதிகாரியான எஸ்.சி.குப்த், “”மாணவிகளை நிர்வாணப்படுத்தி, சோதனையிட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தவுடனே, நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தோம். மேலும் இது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உறைவிடப் பள்ளிகளின் கூட்டமைப்பை கேட்டுக்கொண்டோம்”என்று தெரிவித்தார்.
இதற்கிடையே பணி நீக்கம் செய்யப்பட்ட விடுதிக் கண்காணிப்பாளர் சுரேகா தோமர், சக ஆசிரியைகளின் சசித்திட்டத்தால் தான் சிக்கவைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.