டெல்லி

லோக்பால் சட்டம் நிறைவேற்றப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்தப்போவதாக அண்ணா ஹசாரே பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் லோக்பால் சட்டத்தில் உள்ள குறைகள் நீக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துவிடும் என அனைவரையும் போல் நானும் நம்பினேன். அது நடைபெறவில்லை. அதனால் ஏமாற்றம் அடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

லோக்பால் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என கடந்த 2011 ம் ஆண்டு டில்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற தனது உண்ணாவிரதப் போராட்டம் இந்திய அளவில் கவனம் பெற்றதை நினைவுகூர்ந்துள்ள அவர், அந்தப் போராட்டத்தின் பலனாக நாடாளுமன்றத்தில் லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தங்கள் ஆட்சி  வந்ததும் லோக்பால் சட்டத்தில் இருக்கும் சில குறைபாடுகள் சரிசெய்யப்படும் என எதிரிபார்த்து கடந்த 3 ஆண்டுகள் அமைதி காத்ததாகவும்   குறிப்பிட்டுள்ளார்.

லோக்பால் சட்டம் நடைமுறைக்கு வராமல் இருப்பது மக்களை ஏமாற்றும் செயல் என்று விமர்சனம் செய்துள்ளார்.

அதனால் மத்திய அரசை கண்டித்து மீண்டும் போராட்டத்தை தொடங்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.