சண்டிகர்,

பஞ்சாபில் போதை மருந்து விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 485 நபர்களை கைது செய்திருப்பதாக அம்மாநில முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் அம்ரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் வெற்றிப்பெற்றால் 4 வாரங்களில் போதை மருந்தில்லாத பஞ்சாபை உருவாக்குவேன் என அம்ரீந்தர் வாக்குறுதி அளித்தார்.  அவர் அளித்த வாக்குறுதிபடி போதை தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். போதை மருந்து விற்பனையாளர்கள், கடத்தல்காரர்கள் உள்ளிட்ட 485 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டிருப்பதாக நேற்றுமுன்தினம் செய்தியாளர்களிடம் அம்ரீந்தர் சிங் தெரிவித்தார்.

இந்நிலையில் பஞ்சாப் சட்டமன்றத்தில் இன்று ஆளுனர் உரையாற்றினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதை மருந்து ஒழிப்புத் தொடர்பாக தினமும் என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று தனக்கு அறிக்கை தரவேண்டும் என போலீஸ் அதிகாரி ஹர்பரீத் சித்துவிடம்  தெரிவித்திருப்பதாக முதலமைச்சர் அம்ரீந்தர் சிங் கூறினார்.

இதனிடையே  முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பஞ்சாபில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் போதை மருந்தை தடுக்க பல்வேறு சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அரசு பொறுப்பேற்ற மார்ச் 16 ம்தேதியிலிருந்து மார்ச் 27 வரை பத்துநாட்களில் ஹெராயின், கஞ்சா, அபினி, பாங்க் , போதை ஊசிகள், மாத்திரைகள் உள்பட போதை வஸ்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜலந்தர் மாவட்டத்தில்தான் அதிகளவில் போதை மருந்துகள் பிடிபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.