பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் செயல்படும் ஐ.டி., நிறுவனங்கள் மற்றும் பயோ டெக்னாலஜி நிறுவனங்கள், பெண்களுக்கு இரவுநேர பணி அளிக்க வேண்டாம் என்று கர்நாடக அரசுக்கு சட்டசபை குழு பரிந்துரை செய்துள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் தொடர்பான சட்டசபை குழு, கர்நாடக அரசுக்கு தனது பரிந்துரையை சமர்ப்பித்தது. அதில், “குழு உறுப்பினர்கள், பெங்களூருவில் உள்ள ஐ.டி., நிறுவனங்களில் பெண்களுக்கு அளிக்கப்படும் பணி குறித்து ஆய்வு நடத்தினர். மேலும் பெண் ஊழியர்களின் கருத்தும் கேட்கப்பட்டது.
இதன் அடிப்படையில் பெண்களுக்கு இரவு நேர பணி வழங்க வேண்டாம். அவர்களுக்கு காலை அல்லது மதிய நேர பணியை ஒதுக்கலாம். ஆண்களுக்கு மட்டும் இரவு பணி வழங்கலாம்” என்று இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.
மேலும், “பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை தரப்படுவதில்லை. அல்லது குறைந்த தண்டனை மட்டும் கிடைக்கிறது. ஆகவே இது குறித்து கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும்.
பெண் சிசு கொலை செய்யும் மருத்துவர்கள், செவிலியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் சட்டமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது.