லக்னோ:

உ.பி. சட்டமன்ற தேர்தலில் மாநில முழுவதும் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் பாஜ தெரிவித்திருந்தது. மத்தியில் ஆளும் பாஜ அரசு இந்த தள்ளுபடி உத்தரவை அறிவிக்கும் என்று எதிர்பார்த்திருந்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யாநாத் தற்போது ஏமாற்றமடைந்துள்ளார்.

ஆம்..விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துவிட்டார். இந்த விவகாரத்தில் மாநில அரசுகள் தங்களது நிதி ஆதாரம் மூலம் முடிவெடுதுக் கொள்ள அவர் அறிவுறுத்தியுள்ளார். மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாடு பார்க்க இயலாது. ஒரு மாநிலத்திற்கு மட்டும் தள்ளுபடி செய்வது சரியாக இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

‘‘விவசாய கடன் தள்ளுபடி பிரச்னை பல மாநிலங்களில் உள்ளது. விவசாய துறையில் வட்டி மானியம் மற்றும் இதர உதவிகளை கொள்கை முடிவாக மத்திய அரசு கொண்டுள்ளது. இந்த உதவி தொடரும்’’ என ராஜ்யசபாவில் ஜேட்லி தெரிவித்தார்.

வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங் கூறுகையில், ‘‘உ.பி. தேர்தல் பிரச்சாரத்தில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என பாஜ அறிவித்தது. இந்த வாக்குறுதியை யோகி ஆதித்யாநாத் தலைமையிலான அரசு சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாநிலத்தின் சொந்த நிதி ஆதாரம் மூலம் செயல்படுத்தும்’3 என்றார்.

முன்னதாக ‘‘கடந்த 2006ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்டது போது விவசாய கடன்களை உ.பி.யில் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.