பெங்களூரு,

ர்நாடக மாநில அரசின் பட்ஜெட் கூட்டம் இன்று தொடங்கியது. மாநில நிதி அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்தார். தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியின்போது தொடங்கப்பட்ட ‘அம்மா உணவகம்’ போல் ‘நம்ம கேண்டீன்’  என்ற மலிவுவிலை உணவகத்தை கர்நாடக அரசு தொடங்க இருக்கிறது.

இதற்காக ரூ.100 கோடி நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மறைந்த  தமிழக முன்னாள் முதல்வர்ஜெயலலிதா ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்குவதற்காக தமிழகம் முழுவதும்  ‘அம்மா உணவகம்’  திறந்து பசியாற்றினார்.

இந்த உணவகம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றன. அதையடுத்து மற்ற மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் தமிழ்நாடு வந்து அம்மா உணவகங்கள் குறித்து அறிந்து சென்றனர்.

அதைத்தொடர்ந்து ஒருசில மாநிலங்களில் மலிவுவிலை அரசு உணவங்கள் தொடங்கப்பட்டன.

கர்நாடக மாநில அமைச்சர் டி .கே.சிவகுமார் அம்மா உணவகத்தில் சாப்பிடும் காட்சி

 இந்நிலையில், கர்நாடகாவும் மாநிலம் முழுவதும் அம்மா உணவகம் போல ‘நம்ம கேன்டீன்’ என்ற மலிவுவிலை உணவகத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து, இன்று தாக்கல் செய்யப்பட்ட 2017-18-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில்,  ஏழை மக்களுக்கு 5 ரூபாய்க்கு சிற்றுண்டி, 10 ரூபாய்க்கு சாப்பாடு வழங்க 100 கோடி ரூபாய் செலவில் பெங்களூர் நகரில் ‘நம்ம கேண்டீன்’ எனும் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் பெங்களூரில் திறக்கப்படும் என்றும் மக்களின் வரவேற்பை பொறுத்து மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கும் விரிவாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கடந்த ஆகஸ்டு மாதம்  கர்நாடக மாநில அமைச்சர் டி.கே.சிவகுமார் சென்னை வந்த போது அம்மா உணவகம் சென்று காலை உணவு சாப்பிட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.