சென்னை,
“தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 375 உதவிப் பொறியாளர் பதவிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்படுவதில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக சி.பி.எம். கட்சி பகிரங்க குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை யில் தெரிவித்திருப்பதாவது:
“தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 375 உதவிப் பொறியாளர் பதவிகளுக்கான நேர்காணல் இன்று முதல் சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான எழுத்துத் தேர்வுகள் ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ளன. ஆனால் இந்த தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண்களை மொத்தமாகவும், அதே சமயம் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான தர வரிசைப்படியும் வெளிப்படையாக பிரசுரித்திருக்க வேண்டும்.
அதனடிப்படையில் ஒவ்வொரு போட்டியாளரும் தனது மதிப்பெண்ணை மற்றவர்களுடன் ஒப்பிட்டு தனக்கான வாய்ப்பு என்ன என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆனால் மின்சார வாரியம் நடத்திய தேர்வில் ஒவ்வொருவரும் தனித்தனியாக அவர்களது மதிப்பெண்களை மட்டுமே பார்த்துக் கொள்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதே போன்று தேர்வு முடிந்த பிறகு விடைகளை வெளியிடும் முறையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வழக்கத்தில் உள்ளது. ஆனால் இவை எதையும் தமிழ்நாடு மின்சார வாரியம் கடைப்பிடிக்கவில்லை.
அனைத்தையும் மூடுமந்திரமாக வைத்திருப்பதன் மூலம் தனி நபர்களிடம் பேரம் பேசி லஞ்சம் பெறுவதற்காகவே இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. இந்த நடைமுறை மூலம் தகுதியுள்ளவர்கள் புறக்கணிக்கப்படுவதற்கும், பணம் உள்ளவர்கள் அல்லது அதிகாரத்திலிருப்போரின் ஆதரவு பெற்றவர்கள் இந்த பதவிகளில் நிரப்பப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. வாரியப் பணிக்குள் நுழையும் போதே லஞ்சம் கொடுப்பதன் மூலம் நுழைபவர்களால் நேர்மையான நிர்வாகத்தை கொடுக்க முடியாததோடு தங்களுக்கு யார் உதவினார்களோ அவர்களின் சொற்பேச்சுக் கேட்டு நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.
இத்தகைய நடைமுறைகள் தான் தமிழக அரசு நிர்வாகத்தின் ஒவ்வொரு அணுவிலும் ஊழல் மற்றும் லஞ்சம் மலிந்திருப்பதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. ஆனால் எவ்வித வெளிப்படைத் தன்மையும் அற்று தமிழ்நாடு மின்சார வாரியம் இந்த தேர்வை நடத்துவது அரசு அதிகாரத்தில் இருப்பவர்களின் நிர்ப்பந்தித்தினால் நடைபெறுகிறது என்பதை யாரும் புரிந்து கொள்ள முடியும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கே நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் முறையான வழிமுறைகளை கடைபிடித்து நியமிக்கப்படாததால் அத்தனை பேரையும் உயர்நீதிமன்றம் நீக்கியுள்ள நிலையிலும் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் மாநில அரசும், மின்சார வாரியமும் நடந்து கொள்வது கடும் கண்டனத்திற்குரியது.
இன்று (13.3.2017) முதல் 18-ந் தேதி வரை நடைபெறும் இந்த நேர்முகத் தேர்வு ஏற்கனவே சென்னையில் நடைபெறுவதாக இருந்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால் இந்த தேர்வை மின்சார வாரியம் வண்டலூரில் உள்ள தனியார் விடுதியில் நடத்துகிறது. இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவதற்கு பதிலாக தேர்தல் ஆணையத்தை ஏமாற்றும் முயற்சியுமாகும்.
எனவே, இன்று முதல் நடைபெறும் உதவிப் பொறியாளருக்கான நேர்முகத் தேர்வை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும், தேர்வு எழுதிய அனைவரின் மதிப்பெண்களை வெளிப்படையாக இடஒதுக்கீட்டு பிரிவின் அடிப்படையில் வெளியிட்ட பிறகு நேர்முகத்தேர்வை நடத்த வேண்டுமென்றும், தகுதியானவர்களை நேர்மையான முறையில் நியமனம் செய்யும் வகையிலும் வெளிப்படைத் தன்மையோடு இந்த நியமனங்கள் நடைபெற வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசையும், மின்வாரியத்தையும் வலியுறுத்துகிறது” இவ்வாறு தனது அறிக்கையில் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.