டெல்லி:

சசிகலாவின் பதில் கடிதம் தொடர்பாக வரும் 14ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க ஓ. பன்னீர்செல்வம் அணியினருக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்றது செல்லாது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அணியைச் சேர்ந்த எம்.பி மைத்ரேயன் உள்ளிட்ட 12 எம்பிக்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தனர்.

இந்த புகார் மீது விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் சசிகலாவுக்கு நோட்டிஸ் அனுப்பியது. இதற்கு அதிமுக துணை பொதுச்செயலாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்ட டிடிவி.தினகரன் கையெழுத்திட்ட பதில் கடிதத்ததை வக்கீல்கள் தேர்தல் கமிஷனுக்கு வழங்கினார்.

தேர்தல் ஆணையத்தின் பதிவேடுகளில் அதிமுக தொடர்பாக இடம்பெறாத ஒருவரது பதிலை ஏற்க முடியாது என தெரிவித்து தேர்தல் கமிஷன் மீண்டும் சசிகலாவுக்கு கடிதம் எழுதியது. பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா கையெழுத்திட்ட 70 பக்கங்கள் கொண்ட பதில் கடிதம் கடந்த 10ம் தேதி வக்கீல்கள் மூலம் தேர்தல் கமிஷனிடம் வழங்கப்பட்டது.

அதில் தன்னை எதிர்ப்பவர்கள்தான் தன்னை பொதுச்செயலாளராக முன்மொழிந்தார்கள் என்றும் சசிகலா கூறியிருந்தார். இந்நிலையில் சசிகலாவின் பதில் கடிதத்துக்கு விளக்கமளிக்க தேர்தல் கமிஷன் ஓபிஎஸ் அணிக்கு உத்தரவிட்டுள்ளது. வரும் 14ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க ஓபிஎஸ் அணியினருக்கு தேர்தல் கமிஷன் அவகாசம் வழங்கியுள்ளது.