இம்பால்:

60 இடங்களை கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களையும், பா.ஜ.க. 21 இடங்களையும் கைபற்றியது. நாகாலாந்து மக்கள் முன்னணி வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும், தேசிய மக்கள் கட்சி வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் ஒரு தொகுதியிலும், லோக் ஜனசக்தி வேட்பாளர் ஒரு தொகுதியிலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

இங்கு ஆட்சி அமைப்பதற்கு தேவையான இறுதிப் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்கவில்லை. அதனால் எப்படியாவது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிடவேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.  பா.ஜ.க.வுக்கு ஆதரவு தருவதாக 4 எம்,எல்.ஏ.க்களை பெற்றுள்ள நாகலாந்து மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,  ஆட்சி அமைக்கப் போதுமான அளவு எம் எல் ஏக்கள் தங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார். பா.ஜ.க.விற்கு ஏற்கனவே சிலர் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும், அதைத்தவிர மற்றவர்களின் ஆதரவையும் பெற்று மணிப்பூரில் ஆட்சியமைக்கப்போவதாகவும் அவர் கூறினார்.