வியாழனன்று, மத்திய அரசு வெளியிட்ட தகவலில்படி, 2016ல் மட்டும், இந்தியாவில் 20,000 பெண்கள் மற்றும் குழந்தைகள் மனித கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள், முந்தைய ஆண்டைவிட இது சுமார் 25 சதவீதம் அதிகமாகும்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பாராளுமன்றத்தில் அளித்த விளக்கத்தில், 2016ம் ஆண்டு மட்டும் 19,223 பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் வழக்குகள் பதிவுசெய்யப் பட்டதாகவும். 2015ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 15,448 ஆக இருந்து எனவும் கூறியுள்ளது. அதிகப் பட்சமாய், மேற்கு வங்கத்தில் தான் ஆட்கடத்தல் இந்தியாவிலேயே அதிகப் பட்சமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கடத்தல் தொடர்பான குற்றங்கள்குறித்து புகார் எண்ணிக்கை அதிகரிக்க பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு மற்றும் காவலர்களுக்கு அளிக்கப் பட்ட சிறப்பு பயிற்சியுமே காரணம் எனக் காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
“இக்குற்றங்கள் அதிகளவில் உயர்ந்து வருகின்றன என்று கூறிவிட முடியாது. புகார் தறுவது அதிகரித்துள்ளது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அரசு மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் ஆட்கடத்தல் குறித்து தொடர்ந்து பிரச்சாரங்கள் செய்து வருவதன் மூலமும், ஊடகங்களில் வரும் செய்திகள் வாயிலாகவும் மக்கள் விழிப்புணர்வு பெற்றுள்ளனர்” என்று பெயர் வெளியிட மறுத்த ஒரு மூத்த தில்லி போலீஸ் அதிகாரி கூறினார்.
மற்றொறு அதிகாரி, ” உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்றும், கடத்தலால் பாதிக்கப்பட்ட பலருக்கு சட்டம்குறித்த புரிதல் இல்லாமையாலும், கடத்தல்காரர்களின் மிரட்டலுக்கு அஞ்சியும் புகார் அளிக்க முன்வரவில்லை” எனவும் தெரிவித்தார்.
இந்தியாவை மையமாகக் கொண்ட தெற்காசியா, உலகின் மனித கடத்தல் வேகமாக வளர்ந்து வரும் பகுதிகளில் ஒன்றாக விளங்குகின்றது.
கடத்தல்காரர்கள் ஒவ்வொரு ஆண்டும், பெரும்பாலும் ஏழை, கிராமப்புற மகளிர் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்களை நகரங்களில் நல்ல வேலைகள் வாங்கித் தருவதாக உறுதிக் கூறி, கடத்திச் சென்று நவீன அடிமைகளாக விற்றுவிடுகின்றனர்.
இவ்வாறு அழைத்துச் செல்லப்படும் பலர் வீட்டுவேலையாளாகவும், அல்லது ஜவுளி பட்டறைகள், விவசாயம் போன்ற சிறிய தொழில் செய்யக் கட்டாயப்படுத்தப் படுகின்றனர். பெண்கள் விபச்சாரத்தில் தள்ளப்பட்டு பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
பல சந்தர்ப்பங்களில், அவர்களுக்கு ஊதியம் வழங்கப் படுவதில்லை, அல்லது பெரும்கடனுக்கு ஈடாக அடிமை வேலை செய்யவேண்டியுள்ளது. சிலர் சுவடு தெரியாமல் காணாமல் போய், அவர்களது குடும்பங்களால் கண்டுப் பிடிக்கமுடியாத சூழ்நிலை நிலவுகின்றது.