பெங்களூரு:

5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. உ.பி.யில் பாஜ வெற்றி மேலோங்கி இருக்கிறது. உத்தரகாண்டில் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியை பாஜ தட்டி பறித்துள்ளது. மணிப்பூரிலும், கோவாவிலும் இழுபறி நீடிக்கிறது. பஞ்சாப்பில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இங்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு பாஜ, அகாலிதளம் கூட்டணியிடம் இருந்து ஆட்சியை காங்கிரஸ் பறித்துள்ளது.

Congress

அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ள 3 மாநிலங்களில் 2ல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு 2018ம் ஆண்டு மத்தியில் தேர்தல் நடக்கிறது. இதில் ஹிமாச்சல், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி செய்கிறது. தற்போதைய தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிகளுக்கு எதிராக வலுவான அலை மாநிலங்களில் வீசுவது வெளிப்படையாக தெரிகிறது. இதேபோல் தான் கர்நாடகாவிலும், ஹிமாச்சலிலும் காங்கிரஸ் கட்சிக்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

‘‘இதில் வெற்றி பெறுவது காங்கிரஸ் கட்சிக்கு பெரிய சவாலாக அமைந்துள்ளது. அதிகாரத்திற்கு வர முயற்சிக்கும் பாஜ.வுக்கு இது நல்ல வாய்ப்பாகிடும் என்று’’ என்று பெங்களூருவை சேர்ந்த அரசியல் ஆய்வாளரும், ஜெயின் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான சந்தீப் சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

‘‘இந்த இரு மாநிலங்களிலும் ஆளுங்கட்சிக்கு எதிராக வீசும் அலையை பயன்படுத்தி வெற்றி பெற பாஜ வேகமாக முயற்சிக்கும். பஞ்சாப் வெற்றி மற்றும் மணிப்பூர், கோவாவில் காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றி உ.பி.யில் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்ய முடியாது. உ.பி.யில் சிறிய பங்குதாரராக தான் சமாஜ்வாடியில் காங்கிரஸ் இடம்பெற்றது’’ என்றார்.

அவர் மேலும் கூறுகையில்,‘‘ஆளுங்கட்சிக்கு எதிரான அலையையும் மீறி மணிப்பூர், கோவாவில் காங்கிரஸ் பெற்றி பெற்றுள்ளது என்ற கேள்வி எழலாம். அதே சமயம் பஞ்சாப்பில் முதல்வர் வேட்பாளராக அமரிந்தர் சிங் பெயரை அறிவித்து காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. அங்கு அகாலிதளம், பாஜ கூட்டணியை வீழ்த்தி அவர் வெற்றி பெற்றுள்ளார். அதனால் காங்கிரஸ் கட்சியை மீறிய வெற்றி தான் அங்கு கிடைத்துள்ளது’’ என்றார்.

ஹிமாச்சல பிரதேச பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் ரமேஷ் சவுகான் கூறுகையில், ‘‘ஹிமாச்சலில் 1990ம் ஆண்டு முதல் சுழற்சி அடிப்படையில் தான் மக்கள் அரசியல் கட்சிகளுக்கு வாக்களித்துள்ளனர்’’ என்றார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரான அகமதாபாத்தை சேர்ந்த கன்சியாம் ஷா கூறுகையில்,‘‘பிரதமராக மோடி பதவி ஏற்ற பிறகும் குஜராத்தை தனது சொந்த மாநிலம் என்ற கண்ணோட்டத்திலேயே வைததுள்ளார். இங்கு அரசுக்கு எதிரான அலையை ஏற்படுத்த காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது’’ என்றார்.

காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் ஒரே பெரிய மாநிலம் கர்நாடகா மட்டுமே என்ற மிதப்பில் பாஜ உள்ளது. ‘‘உ.பி.யை தொடர்ந்து கர்நாடகாவிலும் பாஜவுக்கு மக்கள் வாக்களிப்பார்கள். அடுத்து வரும் கர்நாடகா தேர்தலிலும் பாஜ முத்திரை பதிக்கும்’’ என்று கர்நாடகா மாநில பாஜ தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகா முதல்வர் சித்தாராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘ மோடி பிரச்சாரம் செய்ததால் இந்துக்கள் வாக்களித்து கிடைத்த வெற்றியாக உபி.யை பாஜ கருதிவிட முடியாது. ஏனென்றால் பஞ்சாப்பிலும் மோடி பிரச்சாரம் செய்தார். அதனால் இந்து என்பது மட்டும் வெற்றி கனியை அளித்துவிடாது.
மாநில தேர்தல் என்பது உள்ளூர் பிரச்னைகள் அடிப்படையிலும், ஆளுங்கட்சியின் செயல்பாட்டை அடிப்படையாக கொண்டு தான் முடிவு இருக்கும். அதனால் இந்த வெற்றி கர்நாடகாவில் பாதிப்பை ஏற்படுத்தாது. இங்கு ஆளுங்கட்சிக்கு எதிரான அலை வீசவில்லை’’ என்றார்.
இவர் கூறியது சரியா என்பது அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தல் வரை காத்திருக்க வேண்டும்.