அல் கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.ஐ.எஸ்) எழுச்சி, சவுதி அரேபியாவிற்குள்ளும் பல தாக்குதல்களை மதத் தீவிரவாத குழுக்கள் நடத்தியுள்ளனர். இவை, சவுதி அரசுக்கு மத தீவிரவாதத்தினை அவசரமாய் கட்டுப்படுத்த வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
உதாரணத்திற்கு, அமெரிக்காவில் 09 /11 ல் விமானத் தாக்குதல் நடத்திய 19 தீவிரவாதிகளில் பதினைந்து பேர் சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள். மறைந்த அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனும் சவுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
சவுதி அரேபியாவில் தற்போது உள்ள பள்ளி பாடபுத்தக்கங்கள் மிகவும் பிற்போக்கானவையாய் உள்ளதால் அது மதத் தீவிரவாதிகளை உருவாக்குகின்றது எனக் கூறியுள்ளார் சவுதி கல்வி அமைச்சர் அகமது அல்-எய்சா.
இவர் சவூதி அரேபியாவின் முதல் தனியார் பல்கலைக்கழகங்களுள் ஒன்றினை நடத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சவுதி கல்வி முறையை மாற்ற வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார் அகமது அல்-எய்சா.
அகமது அல்-எய்சா இதுகுறித்து கூறுகையில், “மாணவர்கள் எவ்வாறு கற்கும் முறையை மாற்ற விரும்புகின்றேன். மேலும், ஆசிரியர்கள் கற்பிக்கும் முறையையும் மாற்ற விரும்புகின்றேன்”.
“கல்வி முறை நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் பாடப்புத்தகங்களை மேம்படுத்தி மதத் தீவிரவாதிகளை உருவாக்கும் பாடத் திட்டங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றும் பணி கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. மத அடிப்படைவாதிகளின் எதிர்ப்பினைச் சமாளித்து, பாடத்திட்டத்தில் இன்னும் நிறைய மாற்றங்கள் செய்யப்பட வேண்டியுள்ளது என நம்புகின்றேன்” என்றார்.
“இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்களை முற்றிலும் அகற்றிவிட்டு டிஜிட்டல் டேப்லட் அறிமுகப்படுத்தப் படும். இதன் மூலம் பரந்த பாடத்திட்டத்தை உட்புகுத்தி மாணவர்களுக்கு விமர்சன சிந்தனையைத் தூண்ட முடியும், இதன் மூலம் அவர்கள் மத அடிப்படைவாதிகளாய் மாறும் வாய்ப்பைத் தடுக்க முடியும்” என்றார் அகமது அல்-எய்சா.
டிஜிட்டல் தளங்களைக் கல்விக்காகப் பயன்படுத்துவதன் மூலம், ஆசிரியர்கள் தங்களின் பாடத்திட்டத்தைக் காலத்தின் தேவைக்கேற்றபடி மாற்றியமைத்து மாணவர்களைத் தயார்படுத்த முடியும் எனத் தான் நம்புவதாகக் கல்வி அமைச்சர் அகமது அல்-எய்சா தெரிவித்தார்.
“மரியாதைக்குரிய தொழிலான ஆசிரியப்பணியில் இருக்கும் பெரும்பாலான ஆசிரியர்கள் மத அடிப்படைவாதிகளாய் இருப்பதால், தங்களின் வகுப்புகளில் பழமைவாதத்தை போதிக்கின்றனர். அவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார் கல்வி அமைச்சர் அகமது அல்-எய்சா.