சென்னை:

போலீஸ் அதிகாரிகள் சிலர் சட்டசபை காவலர்கள் போன்ற மாறுவேடத்தில் இன்று பேரவையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இந்த புகைப்படங்கள் சமூக வளைதளங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இப்படி வெளியான புகைப்படங்கள் உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில், போலீஸ் அதிகாரிகளை மாறுவேடத்தில் வரச் சொல்லி சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.

சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கு இன்று பிற்பகலில் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ‘‘இன்று கூடிய சிறப்பு சட்டசபை கூட்டத்தில் திமுக எம்எல்ஏ.களை வெளியேற்றும் படி கூறிவிட்டு பேரவையை பிற்பகல் 3 மணிக்கு சபாநாயகர் தனபால் ஒத்திவைத்தார். ஆனால் அதன் பின்னரும் திமுக எம்எல்ஏ.க்கள் பேரவையை விட்டு வெளியேறாமல் உள்ளேயே உட்கார்ந்து கொண்டுள்ளனர். அதனால் அவர்களை கண்காணிக்க கீழ்கண்ட போலீஸ் அதிகாரிகளை சபை காவலர்கள் ஆடையில் சட்டமன்றத்துக்குள் வர அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அதன் விபரம்:

மாநகர கூடுதல் போலீஸ் கமிஷனர் சுதாகர், இணை கமிஷனர்கள் சந்தோஷ்குமார், ஜோஷி நிர்மல் குமார், துணை கமிஷனர் சுதாகர், உதவி கமிஷனர்கள் ரவி, கோவிந்தராஜ், சிவபாஸ்கர், முத்தழகு, தேவராஜ் ஆகியோரை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கெள்கிறேன்’’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபை காவலர்கள் போர்வையில் இருந்த குண்டர்கள் தங்களை குண்டுகட்டாக வெளியேற்றியதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின. இதை உண்மையாக்கும் வகையில் இந்த கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அதிகாரிகளை தவிர மேலும் பல போலீசார் மற்றும் குண்டர்கள் சபை காவலர்கள் வேடத்தில் உள்ளே நுழைந்திருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.