நெட்டிசன்:
“எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க வேண்டும்” என்று அக்கட்சியின் கொறடா, உத்தரவிட்டிருக்கிறார். இதை மீறி எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தால் எம்.எல்.ஏ. பதவி பறிபோகும் என்றும் எடப்பாடி தரப்பில் சொல்லப்படுகிறது.
ஆனால் அப்படி இல்லை என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.
இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தையும் சொல்கிறார்கள்.
கடந்த 2011ம் வருடம் கர்நாடகாவில் இதே போன்ற சூழல் ஏற்பட்டது. அப்போதைய முதல்வர் எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அவர் சார்ந்த பாஜகவின் கொறடா, எடியூரப்பாவை ஆதரித்து வாக்களிக்க தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவிட்டார். ஆனால், பாஜக எம்.எல்.ஏக்கள் 16 பேர், எடியூரப்பாவுக்கு எதிராக வாக்களித்தனர்.
கொறடா உத்தரவை மீறியதாக சொல்லி சபாநாயகர் போப்பய்யா அவர்களை தகுதி நீக்கம் செய்தார். அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில், “நாங்கள் கட்சி மாறி வாக்களிக்கவில்லை. எங்களுக்கு இந்த முதலமைச்சர் மீதான அரசு பிடிக்கவில்லை. அதனால் இவருக்கு எதிராக வாக்களித்தோம். எங்கள் மீது எப்படி கட்சி தாவல் தடை சட்டத்தை பயன்படுத்த முடியும்? நாங்கள் என்ன வேறு கட்சிக்கா வாக்களித்தோம்?” என வாதிட்டார்கள்.
சுப்ரீம் கோர்ட் இந்த 16 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க அறிவிப்பை ரத்து செய்து சபாநாயகர் போப்பய்யாவிற்கு கண்டனமும் தெரிவித்தது.
இதை தமிழக சட்டசபை சபாநாயகர் தனபாலும், கூவத்தூர் விடுதியில் குழம்பியிருக்கும் எம்.எல்.ஏக்களும் உணர்ந்து செயல்பட வேண்டும். எடப்பாடிக்கு எதிராக வாக்களித்தால் எம்.எல்.ஏக்களின் பதவி பறிபோகாது. அவ்வாறே பதவியை பறித்தாலும் நீதிமன்றத்தில் முறையிட்டு தீர்வு காணலாம்.
(வாட்ஸ்அப் பதிவு)