அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த எம்.பியான மைத்ரேயன், டில்லியில் தலைமை தேர்தல் அதிகாரி நஜீம் ஜைதியை சந்தித்தார்.
அப்போது அவர், தமிழக ஆளுநர் வித்யாசாகர், எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைத்த முடிவு தவறு என்ற தனது கருத்தை முன்வைத்ததாக கூறப்படுகிறது. அவருடன் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த எம்.பிக்கள் உட்பட 19 பேர் சென்றார்கள்.
இது குறித்து, சென்னையில் உள்ள ஓ.பி.எஸ். இல்லத்தில் செய்தியாளர்களை தமிழக அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன், செம்மலை, பொன்னையன் ஆகியோர் கருத்து தெரிவித்தார்கள்.
அப்போது மாஃபா. பாண்டியரான், “கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் ஓ.பி.எஸ். பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள். கொல்லைப்புற வழியாக கட்சியையும் ஆட்சியையும் பிடிக்க சிலர் செய்யும் முயற்சியை முறியடிப்போம். மீண்டும் தர்மம் வெல்லும்” எனறு தெரிவித்தார்.
செம்மலை, “தமிழகம் முழுதும் சென்று தொண்டர்களை சந்திக்க உள்ளோம்” என்று தெரிவித்தார்.
பொன்னையன் பேசும்போது, “அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொல்லப்படுவது தவறு. அதில் எந்தவித கட்சி நடைமுறையும் கடைபிடிக்கப்படவில்லை. ஆகவே அது செல்லாது. விரைவில் தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில பொதுச்செயலாளருக்கான தேர்தல் நடைபெற வலியுறுத்தி மைத்ரேயன் இன்று தேர்தல் ஆணையரை சந்தித்துள்ளார்” என்று தெரிவித்தார்.