டெல்லி:

மாரடைப்புக்கு மேற்கொள்ளப்படும் ஆஞ்சியோ அறுவை சிகிச்சைக்கு அடைப்பு சரி செய்யும் ஊசி மருந்து மற்றும் உலோக ஊசி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கான விலையை தேசிய மருந்து விலை ஆணையம் நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது. மருந்து ரூ. 30 ஆயிரம் என்றும், உலோக ஊசி ரூ. 7 ஆயிரத்து 500 என நிர்ணயம் செய்து, அது இன்று முதல் அமலுக்கு வருகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ஆஞ்சியோ அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் லட்சகணக்கான நோயாளிகளுக்கு ஆறுதலாக அமையும். ரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடைகளை எடுக்கு தமணிகளை திறந்து சிகிச்சை மேற்கொள்ள இந்த உபகரணங்கள் பயன்படுத்தப்படுகிறது. 2016ம் ஆண்டில் மட்டும் 6 லட்சம் பேர் இந்த உபகரணங்களை பயன்படுத்தியுள்ளனர்.

மருந்து செலுத்தும் ஊசியின் தற்போதைய விலை ரூ. 24 ஆயிரம் முதல் ரூ. 1.5 லட்சமாக உள்ளது. மற்றொரு உயிரி உபகரணம் ரூ. 1.7 லட்சம் முதல் 2 லட்சமாக உள்ளது. மருந்து செலுத்தும் ஊசியை உள்ளூரில் தயாரிக்க ரூ. 8 ஆயிரம் ஆகிறது. ஆனால் ரூ. 5 ஆயிரத்துக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. நோயாளியை 10 மடங்கு அதிக விலையுடன் சென்றடைகிறது.

மருத்துவமனை நிர்வாகங்கள் இந்த மருத்துவ உபகரணங்களில் அதிக லாபம், அதாவது 650 சதவீதம அதிகமாக வசூல் செய்கிறது. பெரும்பாலான மருத்துவமனைகளில் இது முக்கிய வருவாயாக கருதப்படுகிறது. இத்தகைய மருத்துவமனை நிர்வாகங்கள் மருந்து உபகரண விலை நிர்ணயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தற்போது வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு மூலம் இந்த மருந்து மற்றும் உபகரணங்களுக்கு தனியாக பில் வழங்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளும் இந்த புதிய விலை பட்டியலை பின்பற்ற வேண்டும். அனைத்து மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் விலை பட்டியலை மக்கள் பார்வையில் படும் வகையில் வெளியிட வேண்டும்.

இந்த உபகரணங்களை மத்திய சுகாதார துறை தேசிய அத்தியாவசிய பட்டியலில் சேர்த்துள்ளது. கடந்த ஜூலை மாதம் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.