ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று  வெளியாகிறது. சசிகலா தரப்புக்கு தண்டனை விதிக்கப்பட்டால், வன்முறை வெடிக்குமோ என்ற பயத்தில் இருக்கிறாரர்கள் மக்கள்.

இதற்குக் காரணம் இருக்கிறது.

இதே வழக்கு கர்நாடக சிற்ப்பு நீதிமன்றத்தில் நடந்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது தமிழகம் முழுதும் கலரத்தில் ஈடுபட்டார்கள் அதிமுகவினர்.

இதைவிட…    கொடைக்கானல் ப்ளஸண்ட் ஸ்டே  ஓட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்தபோது, நடந்த கலவரத்தில் மூன்று மாணவிகள் மூவர் பேருந்தில் வைத்து கொளுத்தப்பட்ட நிகழ்வு,  இன்னமும் மக்களை பதைபதைக்க வைக்கிறது.

அன்று நடந்தது என்ன?

அன்று.. பிப்ரவரி 2, 2000ம் வருடம்.

முந்தைய ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் ( 1996 – 2001)  அனுமதிக்கப்பட்ட வரம்புகளை மீறி கொடைக்கானலில் 7 தளங்கள் கொண்ட கட்டிடம்  (ப்ளசன்ட் ஸ்டே ஓட்டல்) கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இதை எதிர்த்து அடுத்து வந்த திமுக அரசு வழக்கு தொடுத்தது.  ப்ளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கு  என்ற இந்த வழக்கில், ஜெயலலிதா குற்றவாளி.

சிறப்பு நீதிபதி-2 ராதாகிருஷ்ணன், ஜெயலலிதாவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை அளித்து தீர்ப்பளிக்கிறார். ஒரு முன்னாள் முதல்வருக்கு கடுங்காவல் தண்டனை என்பது அநேகமாக அதுதான் முதல்முறை.

தங்கள் தலைவிக்கு தண்டனையா என்று அதிமுகவில் உள்ள குண்டர்கள் கொதித்தெழுந்தனர். தமிழகம் முழுதும் கலவரம்.

அதன் மிகக்கொடூரமான தாக்கம் தர்மபுரியில் நடந்தது.

சுற்றுலா முடிந்து கோவை திரும்பிக்கொண்டிருந்தனர் கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவ மாணவியர். இவர்களது பேருந்து  தர்மபுரி வந்த நேரத்தில்தான் தமிழகம் முழுதும் அ.தி.மு.க. குண்டர்கள் கலவரத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். தர்மபுரியிலும் கலவரம் துவங்கியது.

பக்கத்தில் இருந்த பெட்ரோல் பங்க் ஒன்றில் பேருந்தை நிறுத்திவிட்டு,  ஆசிரியர்கள் தங்கள் தலைமைக்கு நிலைமையின் விபரீதத்தை சொல்லியிருக்கிறார்கள். அருகில் பாதுகாப்பான இடத்துக்கு வண்டியை கொண்டு செல்லுமாறு அறிவுரை வந்திருக்கிறது.

ஆகவே, கலெக்டர் அலுவலகம் மற்றும்  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ள திடலில் பேருந்தை நிறுத்தினால் பாதுகாப்பு என்று கிளம்புகிறார்கள். பெட்ரோல் பங்கில் இருந்து அந்தத் திடல்  சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம்தான்.

பேருந்து இலக்கியம்பட்டி என்ற இடத்திற்கு அருகில் வரும்போது  அங்கே ஏராளமான பேருந்துகள் நின்றுகொண்டிருக்கின்றன.

சாலையின் குறுக்கே தடைகள் போடப்பட்டிருந்ததுதான் காரணம்.

தடைகளை போட்டிருந்தவர்கள் அப்பகுதி அதிமுக புள்ளி ராஜேந்திரன். இவர் தலைமையில் மேலும் பல அதிமுக குண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தொடர்ந்து செல்ல முடியாத நிலையில், மாணவர்கள் வந்த பேருந்து, அங்கிருந்த புளியமரம் ஒன்றின் கீழ் நிறுத்தப்படுகிறது. .

என்ன நடக்கிறது என்பதை அறிய கீழே மாணவர்கள் கீழே இறங்கிச் செல்கின்றனர். சுமார் 20 மாணவிகள் மட்டும் பேருந்துக்குள்ளேயே அமர்திருக்கின்றனர். கல்வீச்சுக்கு பயந்து  பேருந்தின் அனைத்து ஜன்னல்களும் அடைக்கப்படுகின்றன.

அப்பொழுது இரு சக்கர வாகனத்தில் வந்த மூவர்  தாங்கள் எடுத்து வந்திருந்த பெட்ரோலை பேருந்தின்  முன்பகுதியில் ஊற்றி தீ வைத்துவிட்டு இரு பெட்ரோல் குண்டுகளையும் பேருந்துக்குள் வீசுகின்றனர்.

பேருந்தில் இருந்து புகை வருவதை கண்ட மாணவர்கள் ஓடி வருகின்றனர். அக்கம்பக்கம் இருந்த பொது மக்களும் தங்கள் கையில் கிடைத்த வாளிகளில் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைக்க முயற்சிக்கிறார்கள்.

தீயணைப்பு நிலையத்துக்கு போன் செய்தால், அங்கிருந்த வாகனங்கள் ஏற்கெனவே வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டதாக தகவல் வருகின்றது.

அங்கு கூடியிருந்த செய்தியாளர்களில் ஒருவர் அந்த வழியாக சென்ற ஒரு காவல்துறை வாகனத்தை நிறுத்தி தகவலை தெரிவிக்கிறார். அதில் இருந்த காவலரோ, “இதில் வயர்லெஸ் இல்லை, நான்  போய் தகவல் சொல்லி உதவிக்கு காவலர்கள் மற்றும் மருத்துவர்களை அனுப்புகிறேன்” என்கிறார். (அப்போது செல்போன்கள் இன்றுபோல் பரவலாக கிடையாது.)

இந்த நிலையில், பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பேருந்து கொளுந்துவிட்டு எரிகிறது. உள்ளே இருந்த மாணவிகள்,   அலறி அடித்தபடி,பேருந்தின் முன்புற வாயில் வழியாக வெளியேற முயற்சிக்கிறார்கள். ஜன்னல்கள் மூடப்பட்டிருந்ததால் புகை மூட்டத்தில் மூச்சு திணறுகிறது. பின்புற படிக்கட்டுகளில் நெஞ்சு வரை இருந்த கதவு பூட்டப்பட்டிருக்கிறது.  பேருந்தின் கடைசி இருக்கையில் லக்கேஜ்களால் நிரப்பப்பட்டிருக்கிறது. பதட்டத்தில் சாவி எங்கே என்றே யாருக்கும் தெரியவில்லை.

எரித்து கொல்லப்பட்ட கோகிலவானி – ஹேமலதா – காயத்ரி

சில மாணவர்கள் பின்புற படிக்கட்டு கதவின் மேற்புற வழியாக சென்று மாணவிகளை இழுத்து வெளியே போடுகிறார்கள். இந்த மாணவர்களுக்கும்பு  புகை மூட்டத்தில் மூச்சு திணறுகிறது.  மயக்கம் வருவது போல் இருக்கிறது. வேறுவழியின்றி, அவர்களை வெளியே வந்துவிடுமாறு எல்லாரும் கத்த மனம் இன்றி வெளியே குதிக்கிறார்கள்.

இதற்கிடையே எல்லோரும் கையறு நிலையில்  அனைவரும்  பார்த்து க்கொண்டிருக்கும் போதே,   பேருந்தின் உள் சிக்கிய  மூன்று மாணவிகள் அலறித்தவித்தபடியே  தீக்கு இரையாகிறார்கள்.

அவர்கள்..  சென்னையை சேர்ந்த ஹேமலதா, விருத்தாசலத்தை சேர்ந்த காயத்ரி, நாமக்கல்லை சேர்ந்த கோகிலவாணி ஆகியோர்.

 

(இந்த பேருந்து எரிப்பு வழக்கில் நடந்தது என்ன..  பார்க்கலாம்..)