முதலமைச்சரே வந்தாலும் வாடிவாசல் திறக்காது, ஜல்லிக்கட்டு நடக்காது! அலங்காநல்லூர் பொதுமக்கள் ஆவேசம்!
மதுரை,
நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும், அதை நானே தொடங்கி வைப்பேன் என்று முதல்வர் ஓபிஎஸ் கூறினார்.
ஆனால், அலங்காநல்லூர் மக்களோ, ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காணாமல் அலங்காநல்லூர் வாடிவாசல் திறக்காது என்று கூறி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில் நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் செய்து வருகிறார்.
அலங்காநல்லூரில் போராடி வரும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் நாளை ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்தும், தற்போது இயற்றப்பட்டுள்ள சட்டம் குறித்து பேசினார்.

மேலும் நாளை முதல்வர் வந்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைப்பதையும் எடுத்து கூறினார்.

ஆனால், போராட்டக்காரர்களோ, ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வரும்வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்… தொடருவோம் என்று கூறி வருகின்றனர்.
முதல்வரே வந்தாலும் நாளை அலங்காநல்லூர் வாடிவாசல் திறக்காது என்று உறுதிப்பட கூறியுள்ளனர்.

மக்களின் இந்த அதிரடி அறிவிப்பால் நாளை ஜல்லிக்கட்டு நடக்குமா, இல்லையா என்பதில் குழப்பம் நிலவி வருகிறது.