நெட்டிசன்:

மூத்த பத்திரிகையாளர் கோவி.லெனின் (Govi Lenin)  அவர்களது முகநூல்பதிவு:

இது ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு. இந்திராகாந்தியின் நூற்றாண்டு. லயன்ஸ் கிளப்புக்கு நூற்றாண்டு. தமிழகத்தைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு.

1917ஆம் ஆண்டு ஜனவரி 17ந் தேதி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பிறந்தார் என்கிறபோது, 2017 என்பது அவருக்கு 100 வயது நிறைவடையும் ஆண்டு. நூற்றாண்டு தொடக்க விழா என்பது கடந்த 2016ஆம் ஆண்டிலேயே ஆரம்பமாகியிருக்க வேண்டும்.

இந்திராகாந்தி நூற்றாண்டு விழாவுக்காக கடந்த நவம்பர் மாதமே காங்கிரஸ் கட்சி சார்பில் விழாக்குழு அமைக்கப்பட்டு விட்டது. இந்த ஆண்டு முழுவதும் விழா கொண்டாடுவார்கள். நவம்பர் 19ந் தேதி நிறைவு விழா நடைபெறும்.
அதுபோல 2016 ஜனவரியில் தொடங்கி இந்த 2017 ஜனவரி வரை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், நூற்றாண்டு நிறைவில்தான் விழாவையே தொடங்கியிருக்கிறார்கள். காரணம், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக 25 ஆண்டுகளுக்கு மேல் இருந்த செல்வி.ஜெயலலிதா தன்னை அரசியலில் ஆளாக்கியவருக்கு செய்த மரியாதை இதுதான். ஜெயலலிதா உயிருடனும் நினைவுடனும் இருந்தவரை சசிகலா தொடங்கி அ.தி.மு.க நிர்வாகிகள் வரை ஒருவர்கூட இது பற்றி ஜெயலலிதாவிடம் நினைவுபடுத்தக் கூடியவர்களாக இல்லை.

ஜெ இறந்ததால், அ.தி.மு.க நிர்வாகிகள் ஆதரவில் பொதுச்செயலாளராகியுள்ள சசிகலாவுக்கு, அ.தி.மு.க. தொண்டர்களின் கோபத்தை சமாளிக்க ஜெயலலிதாவின் பெயர் மட்டுமல்ல, எம்.ஜி.ஆரின் புகழும் தேவை. அதனால்தான் போயஸ் தோட்டத்திலிருந்து ராமாவரம் தோட்டம் வரை அவரது பயணம் தொடர்கிறது. அதனால்தான் நிறைவுக் கட்டத்தில் தொடங்கியிருக்கிறது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு.

ஆங்கிலம் தெரியாது என்று சொல்லி, நீதிமன்ற ஆவணங்களை தமிழில் மொழிபெயர்த்து தரும்படி வழக்கை இழுத்தடித்த சசிகலா, நன்றாகவே அறிந்திருக்கிறார் Better late than never என்ற ஆங்கிலச் சொற்றொடரை.