அலங்காநல்லூர்,

மிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்க கோரி மத்திய மாநில அரசுகளை கண்டித்து, திமுக சார்பில் அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு, உச்சநீதிமன்றம் விதித்த தடையால் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ளது. இந்த வருடமாவது ஜல்லிக்கட்டு போட்டி நடை பெறுமாக என்பது கேள்விக்குறியாகவே உ ள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்காக காளை வளர்ப்போரும்,  ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் போட்டியை நடத்த மத்திய மாநில அரசிடம் கோரிக்கை  விடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு பேர்போன இடம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பகுதிகளாகும். இந்த பகுதிகளில் வளர்க்கப்படும் காளைகள் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயார்படுத்தப்பட்டு வருவது வாடிக்கை.

கடந்த சில ஆண்டுகளாக சுப்ரீம் கோர்ட்டு தடை காரணமாக நடைபெறாமல் இருந்த, ஜல்லிக்கட்டு இந்த ஆண்டாவது நடைபெறுமா என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில்,  ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி, அதனை நடத்த அனுமதி அளிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தி தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து இன்று அலங்காநல்லூரில் உள்ள ஜல்லிக்கட்டு நடைபெறும் இடமான வாடிவாசல் பகுதியில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெறுவதற்கு வசதியாக நேற்று இரவே மு.க.ஸ்டாலின் மதுரைவிட்டார்.

தொடர்ந்து இன்று காலை 10 மணி அளவில் அலங்காநல்லூர் வந்த ஸ்டாலின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். மேடைக்கு ஸ்டாலின் வந்ததும் ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்றனர். மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி உள்பட தென் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான  தி.மு.க.வினரும், காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் என பலரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க கோரியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கோஷம் போட்டனர்.

ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில் திரளான மதுரை மற்றும் தென்மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் கலந்துகொண்டு கோஷமிட்டனர்.