விருதுநகர்,
விருதுநகர் அருகே அனுமதியின்றி நடத்தப்பட்ட பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில், அந்த ஆலையில் வேலை செய்து வந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியான கொடுமை நடந்துள்ளது.
விருதுநகர் அருகே உள்ளது நாராயணபுரம் என்ற கிராமம். அந்த ஊரில் அரசு அனுமதியின்றி பட்டாசு தயார் செய்யும் ஆலை நடைபெற்று வந்துள்ளது.
இன்று காலை வழக்கம்போல் பட்டாசு ஆலையில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது, பட்டாசு வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த திடீர் தீ விபத்தால் குடோனில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. பட்டாசு குடோனும் உடைந்து நொறுங்கியது. இந்த தீ விபத்தில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பலியானார்கள். மேலும் நான்குபேர் பலத்த தீகாயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த்னர். விபத்து நடந்த இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை மேலும் பரவாதவாறு தடுத்து தீயை அணைத்தனர்.
விசாரணையில் அந்த பட்டாசு ஆலை அனுமதியின்றி நடத்தப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொடரும் தீ விபத்துகள்:
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சிவகாசி அருகே நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்து மற்றும் திருச்சி துறையூர் அருகே வெடிமருந்து தொழிற்சாலை விபத்து என ஏராளமான விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற விபத்துக்களில், அங்கு பணி புரியும் தொழிலா ளர்கள் சிக்கி சின்னாபின்னமாகி கரிக்கட்டைகளாக உருமாறி தங்களது இன்னுயிரை கொடுத்து வருகின்றனர்.
அரசு அதிகாரிகள் மாமூல் பெற்றுக்கொண்டு இதுபோன்ற ஆலைகளை, பாதுகாப்பின்றி நடத்த அனுமதிப்பதே இதுபோன்ற விபத்துக்கள் நடைபெற காரணமாவதாக அங்கிருக்கும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதற்கு முடிவுதான் என்ன?… என்று தணியும் இந்த கோர விபத்துக்கள்….