தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சென்னை போயஸ் தோட்ட இல்லத்துக்கு, அவர் மறைந்த பிறகும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
1 எஸ்.பி.,4 ஏடிஎஸ்பிக்கள்.,4 டிஎஸ்பிக்கள், 7 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 240 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், திமுக பொருளாளர் ஸ்டாலின், முதலமைச்சர் ஓபிஎஸ் க்கு எழுதிய கடிதத்தில், “ஜெயலலிதா இறந்த பிறகும் போயஸ் தோட்ட இல்லத்தில் போஸீஸ் பாதுகாப்பு ஏன்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், “உடனடியாக காவல்துறையினரின் பாதுகாப்பை வாபஸ் பெறவில்லை என்றால் வழக்கு தொடுப்பேன்” என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் போயஸ் தோட்ட இல்லத்திற்கு வழங்கப்பட்டு வந்த போஸீஸ் பாதுகாப்பு இன்று திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக தனியார் பாதுகாப்புப் படையினர் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்று ஷிப்டுகளில் தலா இருபது பேர் என மொத்தம் 60 பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்பு தமிழ்நாடு காவல்துறையினர் 240 பேர் இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்கள். அவர்களில் 228 பேர் வாபஸ் பெறப்பட்டு, தற்போது 12 போஸீசார் மட்டும் உள்ளனர்.
முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்தான், காவல்துறைக்கும் பொறுப்பு வகிக்கிறார். அவர், போயஸ் இல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரை வாபஸ் பெற உத்திரவிடமாட்டார் என்பதே பலரது எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த நிலையில் அதிரடி நடவடிக்கை எடுத்து, காவலர்களை விலக்கியுள்ளார் ஓ.பி.எஸ்.