வரும் டிசம்பர் 29ம் தேதி அ.தி.மு.க.வின் செயற்குழு, பொதுக்குழு கூடி புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க இருக்கிறது. இப்பதவிக்கு வர, சசிகலா தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில், ஆரம்பத்தில் சிசிகலாவுக்கு ஆதரவளித்த ஓ.பி.எஸ், தற்போது சசிகலாவை எதிர்த்து பொ.செ. பதவிக்கு போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், ஓ.பி.எஸ்ஸுடன், சசிகலா குடும்பம் சமரசம் செய்துகொண்டுள்ளதாக ஒரு தகவல் வெளயாகி உள்ளது.
“இதன் வெளிப்பாடு, அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ தொலைக்காட்சி என அறியப்படும் ஜெயா டிவியில் தெரிகிறது. இதுவரை தமிழக முதல்வர் ஓ.பி.எஸ். பற்றிய செய்திகள் ஜெயா டிவியில் புறக்கணிக்கப்பட்டே வந்தது. அப்படியே செய்தி வந்தாலும் “முதல்வர் ஓ.பி.எஸ். “ என்று சொல்லாமல், வெறும் “முதல்வர்” என்றுதான் சொல்வார்கள். ஓ.பி.எஸ். பெயர் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். ஆனால் இன்று, “முதல்வர் ஓ.பி.எஸ்.” என்று கூறியதோடு, அவரது படத்தையும் ஒளிபரப்பினார்கள்.
ஜெயா தொலைக்காட்சியை கவனிக்கும் அதிமுக ஆதரவாளர்களுக்கு இது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
தவிர சமீப காலமாக சசிகலா பற்றிய செய்திகளுக்கு ஜெயா டிவி முக்கியத்துவம் கொடுத்து வந்தது. ஆனால் தற்போது சசிகலா பற்றிய செய்திகள் ஒளிபரப்புவது அருகி விட்டது.
ஆகவே சசிகலா குடும்பத்துக்கும், ஓ.பி.எஸ்ஸுக்கும் ஏதோ ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது” என்று ஒரு தகவல் உலவுகிறது.
அது எப்படிப்பட்ட சமரச ஒப்பந்தம் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும் என்றும் பேசப்படுகிறது.