சென்னை,
பிரபல மணல்குவாரி தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், சேகர்ரெட்டியின் ரகசிய டைரி கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த டைரியில் அவருக்கு உதவியவர்கள், அவர் யாருக்கெல்லாம் என்ன்ன செய்தார் என்ற தகவல்கள் எல்லாம் இருப்பதாக தெரிகிறது. இதனால் ஆளுங்கட்சி புள்ளிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
தமிழக மணல் குவாரி கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட ரகசிய டைரியில் அதிமுக முக்கிய புள்ளிகள் 6 பேர் மற்றும் 12 ஐஏஎஸ்,  ஐபிஎஸ் அதிகாரிகள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ள என அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டைரியை ஆய்வுசெய்து வரும் வருமானவரித்துறை அதிகாரிகள் அடுத்த அதிரடி நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக அவருக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் என்ன நடக்குமோ என்ற பீதி நிலவுகிறது. சேகர்ரெட்டியுடன் பணபரிமாற்றங்கள் வைத்திருந்த அமைச்சர்கள், அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.
ஏற்கனவே, அவருக்கு உதவி செய்ததாக தமிழக அரசின் தலைமை செயலராக இருந்த ராமமோகன ராவ் வீடு, மகன் விவேக் வீடு, சித்தூரில் உள்ள சம்பந்தி பத்ரிநாராயணன் வீடு உள்பட 13 இடங்களில் வருமான வரித் துறையினர் திடீர் சோதனை நடத்தி,  ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கமும், லட்சக்கணக்கான புதிய ரூபாய் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள ராமமோகன் ராவின் சம்பந்தி வீட்டிலும் பல கோடி பணமும், தங்க, வைர நகைகளும் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.
மேலும் சென்னை வீடு மற்றும் கோட்டையில் உள்ள ராம மோகன ராவ் அறையில் இருந்தும் முக்கியமான ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள், சி.டி.கள், லேப்டாப்கள் போனற்வற்றை  வருமான வரி துறை அதிகாரிகள் அள்ளி சென்றனர்.
ராமமோகன் ராவின் உதவியாளர்களான சேகர், குமார் ஆகியோரிடம்  ரகசிய விசாரணை நடைபெற்றது. அவரது மகனையும் ரகசிய விசாரணைக்கு உட்படுத்தினர்.
இதன் காரணமாக அவருக்கு உதவியவர்கள் கலக்கமடைந்து உள்ளனர். எந்த நேரத்திலும்  நம்மை தேடி அதிகாரிகள் வரலாம் என எதிர்பார்த்து பதட்டமடைந்து உள்ளனர்.