சென்னை,
அதிமுகவின் பொதுக்குழு வரும் 29ந்தேதி கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.
அதிமுக பொதுக்குழு வரும் 29-ந் தேதி கூடுகிறது என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபம் புக் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இப்பொதுக் குழு கூட்டத்தில் அதிமுகவின் பொதுச் செயலராக சசிகலா நடராஜன் தேர்வு செய்யப்படக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளராக இருந்தர ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, பொதுச்செயலாளர் பதவி அதிமுகவில் காலியாக உள்ளது. ஜெயலலிதா வகித்து வந்த அதிமுக பொதுச்செயலர் பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்தது.
ஜெயலலிதாவின் தோழியான சசிகலா அதிமுக பொதுச்செயலாளராகி, முதல்வர் பதவியை பிடிக்க திட்ட மிட்டுள்ளதாக தெரிகிறது.
அதற்கேற்றார் போல், அவருக்கு ஆதரவான அதிமுக நிர்வாகிகள், ஜாதி சங்கங்களின் தலைவர்கள் பலரும் போயஸ் கார்டனுக்கு வரவழைக்கப்பட்டு, சசிகலாவிடம் நீங்களே அதிமுக பொதுச்செயலராகி கட்சியை வழி நடத்துங்கள், ஆட்சிக்கு தலைமை தாங்குங்கள் என கோரிக்கை விடுக்கும்படி சொல்ல வைக்கப்பட்டு வருகின்றனர்.
கட்சியின் மூத்த நிர்வாகிகளும் நெருக்குதல்களுக்கு ஆளாகி, சசிகலாவை ஆதரிப்பதாக பேசி வருகின்றனர்.
இதற்கிடையில் அதிமுகவை சேர்ந்த எம்.பி. சசிகலா புஷ்பாவும் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன் என அறிவித்து உள்ளார். இதுகுறித்து வழக்கும் தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில் அதிமுகவின் பொதுக்குழு வரும் 29-ந் தேதி சென்னையில் நடைபெறும் என தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்த பொதுக்குழுவில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுகவின் பொதுச்செயலராக தேர்வு செய்யப்படக் கூடும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் சசிகலா எதிர்ப்பு அணியினர் பகிரங்கமாக போர்க்கொடி தூக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, ஜெயலலிதா வெற்றிபெற்ற சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில், சசிகலா பேனர் வைத்ததை கிழித்து எறிந்து, அதிமுக தொண்டர்கள் மறியல் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.