கோடை காலங்களில் வெயில் வறுத்தெடுக்கும் சவுதி அரேபியாவில் வழக்கத்துக்கு மாறாக பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. வழக்கமாக பனிபொழியும் மேற்கத்திய நாடுகளில் பனிப்பொழிவு ஏற்பட்டால் பெரும்பாலும் மக்கள் வீட்டுக்குள் முடங்கிவிடுவது வழக்கம். ஆனால் வெயிலையே பார்த்து பழக்கப்பட்ட அரபிய மக்கள் இந்த பனிப்பொழிவை உற்சாகமாக கொண்டாட துவங்கியுள்ளனர்.
அழகான பனிப்பொடிகள் போல பொழிந்து சவுதி பாலைவனத்தை மூடி பாலைவன தேசத்தை அண்டார்ட்டிகா போல காட்சியளிக்க வைத்திருக்கிறது. இதுபோன்ற நவம்பர் மாதங்களில் கூட அங்கு வழக்கமாக 20° C (68° F) வெப்பநிலை இருக்கும். அதனால் இந்த திடீர் பனிப்பொழிவை மக்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.
பனியில் ஸ்கேட்டிங் போவதும், தங்களுக்கு பிடித்தமான கால்பந்து அணியை காட்டும் விதத்தில் பனிமனிதன் செய்து விளையாடுவதும் என்று மக்கள் குதூகலமடைந்துள்ளனர். இதற்கிடையே பனிமனிதன் செய்வது மேற்கத்திய கலாச்சாரமாதலால் பனிமனிதன் செய்வதற்கு அங்குள்ள இஸ்லாமிய நிர்வாகம் ஏற்கனவே பத்வா (தடை) விதித்துள்ளது.
பனியில் வாகனங்களை ஓட்டி பழக்கமில்லாத ஓட்டுநர்கள் ஆங்காங்கே வாகன நெரிசலை ஏற்படுத்தி வருகின்றனர்.