சேலம்,
இந்திய மருத்துவ கவுன்சிலை (Indian Medical Council) கலைத்துவிட்டு புதிய ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
மத்தியஅரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து, நாடு முழுவதும் 16ம் தேதி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். பொதுமக்களை பாதிக்காதவாறு காலை 11 மணி முதல் 1 மணி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணைத்தலைவர் பிரகாசம், சேலம் கிளை தலைவர் முத்துக்குமரன் ஆகியோர் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இருந்து இந்திய மருத்துவ கவுன்சில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் 96 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அதில் 60 பேர், மருத்துவர்களால் தேர்வு செய்யப்படுபவர்கள்.
மருத்துவ படிப்பிற்கு அனுமதி அளித்தல் உள்ளிட்ட முக்கிய பணிகளை இக்கவுன்சில் கவனித்து வருகிறது.
ஆனால், மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சிலை (எம்சிஐ) கலைத்துவிட்டு, புதிதாக தேசிய மருத்துவ ஆணையத்தை (என்எம்சி) ஏற்படுத்த முயற்சித்து வருகிறது.
இதற்கான திருத்த சட்ட மசோதாவை வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய இருக்கிறது.
புதிதாக அமைக்க இருப்பதாக கூறப்படும் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு தலைவர் மற்றும் உறுப்பினர் செயலரை மத்திய அரசே நியமிக்கும் என தெரிவிக்கின்றனர். அதேபோல், தலைவர், உறுப்பினர் செயலர் உள்பட மொத்தம் 20 உறுப்பினர்களை கொண்டு இயங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
18 உறுப்பினர்களில் 8 பேரை 4 அமைச்சகமும் நியமிக்க ஏற்பாடு செய்துள்ளனர். 8ல் 4 பேர் மருத்துவத்தை சாராதவர்களாக நியமிக்கப்படவுள்ளனர். மீதமுள்ள 10 பேரும் பகுதி நேர உறுப்பினர்களாக இருப்பார்கள்.
அதில், 5 பேர் மருத்துவ தொழிலை சாராதவர்களாக நியமிக்கப்படவுள்ளனர். அதுவும் குறிப்பிட்ட 5 மாநிலத்தை சேர்ந்தவர்களை நியமிக்கும் வகையில் இந்த அமைப்பை ஏற்படுத்த பாஜ அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இத்தகைய தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்பட்டால், முறைகேடுகள் தான் அதிகளவு நடக்கும். அத்துடன் மருத்துவக்கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளித்தல், மருத்துவ மாணவர்கள் எண்ணிக்கை தொடர்பான முடிவினை எடுத்து அறிவிப்பதில் பல சிக்கல்கள் ஏற்படும்.
புதிய மருத்துவ கவுன்சில் அமைந்தால், அது ஊழலுக்கு வழிவகுக்கும். ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியாத நிலை ஏற்படும்.
ஆகவே, மத்திய அரசின் இந்த முடிவை கைவிடுமாறு , இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்துகிறது. மேலும்,
இதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வரும் 16ம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரையில் நாடு முழுவதும் மருத்துவ சங்கத்தில் உள்ள அனைத்து மருத்துவர்களும் பேரணி மற்றும் தர்ணாவில் ஈடுபடுவார்கள்.
இதேபோல், நாடு முழுவதும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் இந்திய மருத்துவ கவுன்சிலை கலைக்க கூடாது என வலியுறுத்தி மனு அளிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.