கோவை:
ஊழல் வழக்கில் கோவை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராதாகிருஷ்ணனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
கோவை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தராக இருந்தவர் ராதாகிருஷ்ணன். கடந்த 2008-2009ம் ஆண்டு பணியில் இருந்தபோது, பல்கலைக்கழகத்துக்கு தேவையான மேஜை, நாற்காலி போன்ற தளவாட பொருட்கள் வாங்கியதில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதைதொடர்ந்து லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவால் அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விசாரணையில், 2008-2009ம் ஆண்டு துணைவேந்தராக இருந்தபோது, பல்கலைக்கழகத்துக்கு தேவையான தளவாட பொருட்கள் வாங்கியதில் ரூ. 1.37 கோடி ரூபாய் அளவு ஊழல் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஊழல் சம்பந்தமாக அவர்மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு வழக்கு பதிவு செய்தது.
இரண்டு முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால், அவரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி மதுரசேகரன் உத்தரவிட்டார்.
அதையடுத்து, ஆகஸ்டு 31ந்தேதி ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு நீதி மன்ற காவலில் வைக்கப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்து வந்த கோவை லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு நீதிமன்ற நீதிபதி மதுரசேகரன் இன்று தீர்ப்பு வழங்கினார்.
அதில், அவர்மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், ராதாகிருஷ்ணனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமாக ரூ.1 லட்சமும் செலுத்துமாறு தீர்ப்பளித்துள்ளார்.