வேலூர்,
ராஜீவ் கொலை கைதை பேரறிவாளன், மகராஷ்டிர மாநில எரவாடா சிறையின் துணைகண்காணிப்பாளர்மீது, மகராஷ்டிரா தகவலறியும் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக்கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், எரவாடா மத்தியச்சிறையின் பொது தகவல் அதிகாரிக்கு எதிராக மகாராஷ்டிரா மாநிலதகவல் ஆணையத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறார்.
எந்த சட்டவிதிகளின்படி நடிகர் சஞ்சய்தத் தண்டனைக்காலம் முடிவதற்கு முன்னரே விடுதலை செய்யப்பட்டார் என்பதை தெரிந்துகொள்ள தகவலறியும் உரிமை சட்டத்தின்கீழ் மனு அளித்திருந்தார் பேரறிவாளன்.
இக்கேள்விக்கு தக்க பதிலளிப்பதில் தாமதம் காட்டிய மகராஷ்டிரா மாநில பொதுதகவல் அதிகாரி, ‘கேட்கப்படும் தகவல், மூன்றாம் தரப்பு நபர் தொடர்புடையது’ என மனுவை நிராகரித்தார்.
இதைத்தொடர்ந்து பேரறிவாளன், சஞ்சய்தத் அடைக்கப்பட்டிருந்த ஏரவாடா சிறையின் துணைகண்காணிப்பா ளரிடம் மேல்முறையீட்டு மனுவை பதிவு செய்தார். அதுவும் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து எரவாடா சிறையின் துணை கண்காணிப்பாளர்மீது, மகராஷ்டிரா மாநில தகவலறியும் ஆணை யத்தில் பேரறிவாளன் புகார் அளித்துள்ளார்.
அப்புகாரில், “மூன்றாம் தரப்பு நபர் குறித்த தகவல் என்றுகூறி, கைதி ஒருவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டது தொடர்பான தகவல்களை அளிக்க மறுத்திருக்கிறது. சொல்லப்பட்டிருக்கும் காரணம் பொய்யானது. செல்வாக்குள்ள நபர்களுக்கு ஆதரவான முடிவு இது.
கைதி ஒருவரை விடுதலை செய்யும் நடவடிக்கைகள் நாட்டின் சட்டவிதிகள் குறித்த காரியம். இதைப்போன்ற தகவல்கள் மறுக்கப்படக்கூடாது. ஆகவே தகவல் அளிக்க மறுத்த எரவாடா சிறை துணைகண்காணிப்பாளர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.