
சென்னை,
தமிழக அமைச்சரவையின் இரண்டாவது கூட்டம் நிதிஅமைச்சர் ஓபிஎஸ் தலைமையில் இன்று மாலை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வருகிறார். முதல்வர் நீண்ட காலம் சிகிச்சை பெற வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனையின் அறிவிப்பை தொடர்ந்து, கவர்னரின் அறிவுறுத்தலின் பேரில்
முதல்வர் ஜெயலலிதா வகித்து வந்த அரசுத் துறைகள் அனைத்தும், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், அமைச்சரவைக் கூட்டத்துக்கும் அவரே தலைமை வகிப்பார் என ஆளுநர் வித்யா சாகர் ராவ் ஏற்கெனவே தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, கடந்த 19-ந்தேதி நிதி அமைச்சர்.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சரவை முதல் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மீண்டும் அமைச்சரவையின் இரண்டாவது கூட்டம் இன்று மாலை நடைபெற்றது.
இன்று மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் ஆரம்பமானது. இந்தக் கூட்டத்தில் காவிரி விவகாரம், உதய் திட்டம், புதிய கல்விக் கொள்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel