தமிழக முதல்வர் மரணம் என்று பேஸ்புக்கில் வதந்தி பரப்பிய, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தமிழச்சி என்பவர் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவி உள்ளது.
கடந்த மாதம் 22ம் தேதி, உடல் நலக்குறைவால், தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடன்பிறவா சகோதரி சசிகலா, அருகில் இருந்து கவனித்துக்கொள்கிறார். கவர்னர், மத்திய அமைச்சர், அரசியல் தலைவர்கள் எவரும் ஜெயலிதாவை பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜெயலலிதா உடல் நிலை குறித்து சிலர் வதந்தி பரப்பினர். இது தொடர்பாக, தமிழக காவல்துறையினர் 53 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் தமிழச்சி என்பவர், முகநூலில் தொடர்ந்து ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து வதந்தி பரப்பி வந்தார். ஒரு கட்டத்தில் ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதாகவும் எழுதினார். இது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், தன் மீது தமிழக போலீஸ் வழக்கு தொடுத்தால் அதை எதிர்கொள்வதாகவும் எழுதினார்.
ஏற்கெனவே சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சுவாதியை, பாஜக பிரமுகர் கருப்பு முருகானந்தம்தான் கொலையை செய்தார் என்று பேஸ்புக்கில் எழுதிவந்தார். இதையடுத்து கருப்பு முருகானந்தம், தமிழச்சி மீது காவல்துறையில் புகார் கொடுத்தார்.
இதற்கிடையே இவரைப்போலவே சுவாதி மற்றும் ராம்குமார் மரணங்கள் குறித்து பரபரப்பாக எழுதி வந்த திலீபன் மகேந்திரன் என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை தமிழச்சி சுமத்தினார். இதையடுத்து திலீபன் மகேந்திரன் தனது முகநூல் கணக்கை முடக்கிவிட்டார்.
ஆனாலும் தமிழச்சி பரபரப்பாக ஏதாவது எழுவதை தினப்படி வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால் கடந்த சில நாட்களாக அவர் பேஸ்புக்கில் பதிவுகள் எதையும் எழுதவில்லை.
இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய பிரமுகர், முறைப்படி பிரான்ஸ் தூதரகத்தில் தமிழச்சி மீது புகார்கொடுத்ததாகவும் இதையடுத்து, பிரான்ஸ் காவல்துறையினரால் தமிழச்சி கைது செய்யப்பட்டதாகவும் சமூகவலைதளங்களில் தகவல் பரவி வருகிறது..
அதே நேரம், “தமிழச்சி மீது பிரான்ஸ் தூதரகம் மூலம் புகார் அளிக்கப்பட்டது உண்மையே. இதில் பயந்துபோன தமிழச்சி, பேஸ்புக் பதிவுகள் எழுதுவதை நிறுத்தி வைத்துள்ளார். மற்றபடி அவர் கைது செய்யப்பட்டார் என்பது தவறு. அவதூறாக எழுதுபவர்களுக்கு பிரான்ஸ் நாட்டில் அதிகபட்சம் அபராதம் மட்டுமே விதிக்கப்படும் ” என்றும் ஒரு தகவல் உலவுகிறது.