கத்தார் நாடு தனது புதிய தொழிலாளர் நலச் சட்டங்களை அறிவித்துள்ளது. இது வரும் டிசம்பர் மாதம் 13-ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது.

qatar

வெளிநாட்டு தொழிலாளர்களின் வரத்து, வெளியேற்றம், தங்கியிருத்தல் மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஆகியவற்றை வரையறுக்கும் விதத்தில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட சட்டத்தின் (எண்21) திருத்தமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
வெளிநாட்டு தொழிலாளர்களின் வரத்து, வெளியேற்றம், தங்கியிருத்தல் மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஆகியவற்றை வரையறுக்கும் விதத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ஆம் தேதி திருத்தம் செய்யப்பட்ட சட்டத்தினை (எண்-4) இப்புதிய சட்டம் முற்றிலும் ரத்து செய்யும் என தெரிகிறது.
இப்புதிய சட்டதிருத்தத்தின்படி ஏற்கனவே கத்தாரில் பணிபுரிந்துவிட்டு சொந்த நாடு திரும்பியவர்கள் மீண்டும் கத்தாரில் பணிசெய்ய இரண்டாண்டுகள் இருந்த தடை நீக்கப்படுகிறது, மேலும் முன்பு பணிசெய்த நிறுவனத்திடமிருந்து தடையில்லா சான்றிதழும் பெற இனி தேவையில்லை.
இப்புதிய சட்டம் கஃபாலா என்ற ஸ்பான்சர்ஷிப் முறையை முற்றிலும் நீக்கிவிட்டு வெளிநாட்டு பணியாளர்கள் கத்தாருக்கு வந்து தங்கியிருந்து பணி செய்ய புதிய ஒப்பந்த முறை அமல்படுத்தப் படுகிறது. அதன்படி பணியாளர் கத்தாருக்கு வரும் முன்னரே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும்.
அதேபோல தற்பொழுது கத்தாரில் தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டு பணியாளர்களின் ஒப்பந்தமும் புதிய சட்டத்திருத்தத்தின்படி திருத்தியமைக்கப்பட்டு புதிய ஒப்பந்தம் உருவாகப்படும்.
ஏற்கனவே ஸ்பான்சர்ஷிப் முறையில் பணி செய்து கொண்டிருக்கும் பணியாளர்கள் தங்கள் புதிய வேலைக்கு தங்களது பழைய ஸ்பான்சரின் அனுமதி பெறத்தேவையில்லை.
கத்தாரில் வேலை செய்ய புதிய ஒப்பந்தம் பெற்ற பணியாளர் விசா மற்றும் பிற தகுதிகள் சரியாக இருக்கும் பட்சத்தில் மறுநாளே கத்தாருக்கு வரலாம். ஒப்பந்தமானது பணியாளாருக்கும் நிறுவனத்துக்கும் மட்டுமே, இரு தரப்பாரும் விரும்பினால் இரண்டு ஆண்டுகளோ அல்லது ஐந்து ஆண்டுகளோ வரிகூட ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம்.இரு தரப்பினரும் ஒப்பந்தத்துக்கு உட்பட்டு நடக்க வேண்டும்.
இச்சட்டம் நடைமுறைக்கு வந்தபின்னர் நாட்டை விட்டு வெளியெற விரும்பும் பணியாளர்கள் தங்கள் ஸ்பான்சர்களின் அனுமதி பெறத் தேவையில்லை. ஆனால் பணியாளர் தான் வேலை செய்யும் நிறுவனத்துக்கு தனது வெளியேற்றம் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்.
நீதிமன்ற தீர்ப்பு மூலம் தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பபட்ட பனியாளர்கள் கத்தார் உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின்றி மீண்டும் கத்தாருக்குள் நுழையமுடியாது.
ஒப்பந்தம் நிறைவு பெற்ற பணியாளர்களோ அல்லது ஐந்து ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணி செய்த பணியாளர்களோ பணிமாற்றம் விரும்பினால் அரசாங்கத்தின் அனுமதி பெறவேண்டும். ஒப்பந்தம் நிறைவு பெறும் முன்னர் பணி மாற்றம் விரும்பும் பணியாளர்கள் தாங்கள் தற்போது பணி செய்யும் நிறுவனத்தின் அனுமதி பெறுவதோடு அத்துறை சார்ந்த அரசு அதிகாரிகளின் அனுமதியையும் பெற வேண்டும்.
இப்புதிய சட்டத்தின்படி எக்ஸிட் பெர்மிட் விரும்பும் வெளிநாட்டு பணியாளர்கள் உள்துறை அமைச்சகத்தின் அனுமதி மட்டும் பெற்றால் போதும் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் அனுமதி தேவையில்லை. அவர்களது விண்ணப்பம் மூன்றே நாட்களில் அங்கீகரிக்கப்படும். ஏதேனும் அவசர நிலை ஏற்ப்பட்டால் பணியாளார் மற்றும் நிறுவனம் ஆகிய இருவரின் விண்ணப்பத்தின் பேரில் எக்ஸிட் பெர்மிட் உடனடியாக வழங்கப்படும்.
அதே போல இப்புதிய சட்டத்தின்படி புதிய வேலைக்கு செல்ல பணியாளருக்கு பழைய நிறுவனத்தின் ஒப்புதல் தேவையில்லை. தனது ஸ்பான்ஸர் இறந்துவிட்ட சூழலிலோ அல்லது வேலை செய்த நிறுவனம் மூடப்படும் சூழலிலோ பணியாளர் அரசின் அனுமதியுடன் புதிய ஸ்பான்சரை பெற்றுக்கொள்ளலாம்.

கஃபாலா சட்டத்தில் செய்யப்பட்ட 16 முக்கிய மாற்றங்கள்

1. புதிய சட்டம் இந்த ஆண்டில் (2016) அமலுக்கு வரும்
2. புதிய சட்டம் வெளிநாட்டு பணியாளருக்கு முழுக்க முழுக்க ஒப்பந்த அடிப்படையிலானது.
3. புதிய ஒர்க் விசாவின் இரண்டாண்டு தடை முற்றிலும் நீக்கப்படுகிறது.
4. புதிய வேலையில் சேர பழைய நிறுவனத்தின் ஒப்புதல் தேவையில்லை
5. கத்தாரில் வேலை செய்ய புதிதாக ஒப்பந்தம் செய்தவர்கள் மறுநாளேகூட கத்தார் வரலாம்
6. இனி பயணத்துக்கு எக்சிட் பெர்மிட் தேவையில்லை.
7. நாட்டை விட்டு வெளியேற விரும்பும் வெளிநாட்டு பணியாளர் அதை மூன்று நாளைக்கு முன்பே மெட்ராஷ் 2 சிஸ்டம் மூலம் தனது நிறுவனத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.
8. ஏற்கனவே கத்தாரில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பழைய பணியாளர்களின் ஒப்பந்தம் புதிய சட்டத்தின்படி புதுப்பிக்கப்படும்.
9. ஒப்பந்ததில் கையெழுத்திட்ட நாளே முதல் வேலைநாள் என்று கணக்கில் கொள்ளப்படும்.
10. பணிக்கான ஒப்பந்தம் தொழிலாளர் நலத்துறை மற்றும் சமூகநலத்துறையின் ஒப்புதல் பெற்ற பின்பே செல்லுபடியாகும்.
11. மூடப்பட்ட ஒப்பந்தங்கள் (Closed contracts) ஐந்து ஆண்டுகளுக்கு மேல் செல்லுபடியாகாது.
12. திறந்த ஒப்பந்தங்களின்படி ஒரு பணியாளர் 5 ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் பணியாற்றினால் அவர் அதன்பின்னர் வேறொரு நிறுவனத்துக்கு பணி மாற்றம் செய்துகொள்ளலாம்.
13. நிலையான ஒப்பந்தத்தில் (fixed contracts) உள்ள பணியாளர்கள் தங்கள் ஒப்பந்தத்தின் முடிவில் வேறு நிறுவனங்களுக்கு செல்ல தடையில்லாச் சான்றிதழ் தேவையில்லை. ஆனால் உள்துறை அமைச்சகம் மற்றும் சமூகநலத்துறையிடம் ஒப்புதல் பெறவேண்டும்
14. தனது ஸ்பான்ஸர் இறந்துவிட்ட சூழலிலோ அல்லது வேலை செய்த நிறுவனம் மூடப்படும் சூழலிலோ பணியாளர் அரசின் அனுமதியுடன் புதிய ஸ்பான்சரை பெற்றுக்கொள்ளலாம்.
15. ஒரு நிறுவனம் தனது பணியாளரை தகுந்த முன் அனுமதியின்றி வேறு ஒரு நிறுவனத்தில் பணியாற்ற நிர்ப்பந்தித்தால் அந்நிறுவனத்துக்கு QR50,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
16. வெளிநாட்டு பணியாளரின் பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொள்ளும் நிறுவனத்துக்கு QR10,000 முதல் QR25,000 வரை அபராதம் விதிக்கப்படும்.
இதுவரை இருந்த பல குழப்பங்களை தெளிவுபடுத்தும் விதத்தில் இந்த புதிய சட்டம் அமைந்திருக்கிறது. இச்சட்டம் விசா முறைகேடுகள் மற்றும் மோசடிகளை தடுக்கும் விதத்திலும் வெகு தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இப்புதிய சட்டம் பழைய சட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதல்ல, ஆனால் பழைய சட்டத்திலிருந்த பல ஓட்டைகளை இது அடைத்திருக்கிறது. அந்த ஓட்டைகளைப் பயன்படுத்தித்தான் பல மோசடிகள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பான்சர்ஷிப் குறித்த பழைய சட்டம் நிறுவனங்களுக்கு சாதகமாகவும், புதிய சட்டம் பணியாளர்களுக்கு சாதகமாகவும் அமைந்துள்ளது. புதிய சட்டம் கத்தாரை சர்வதேச மார்கெட்டில் ஒரு பொருளாதார சக்தியாக நிறுத்தும் முயற்சியாகவே சட்ட வல்லுனர்களால் பார்க்கப்படுகிறது.