நினைவுகள்:
ஜெயலலிதா என்றாலே தன்னைச் சுற்றி இரும்பு வேலி போட்டுக்கொண்ட இரும்பு மனுஷி என்பதாக ஒரு தோற்றம் உண்டு. பேட்டிகளின் போதுகூட, தனது கோபத்தை அவர் வெளிப்படுத்திய தருணங்கள் உண்டு.
ஆனால் அவரது இயல்பான தன்மையை வெளிப்படுத்தும் பேட்டி இது. பல வருடங்களுக்கு முன், ஊடகவியலாளர் சிமி எடுத்த, Rendezvous with Simi Garewal (ரான்டேவூ வித் சிமி கரேவல்) என்ற நிகழ்ச்சிக்கான பேட்டி இது.
சில கேள்விகளுக்கு வெட்கப்புன்னகையுடன் பதில் அளித்து, பாடி, தனது இளமைக்காலம் குறித்த மலரும் நினைவுகளைப் பகிர்ந்து… வித்தியாசமான பேட்டி இது.
தனது பதில்களுக்கான (ஆங்கில) வார்த்தைகளை, மிகச் சரியாக தேர்ந்தெடுத்து பதில் அளிக்கிறார் ஜெயலலிதா.
அந்த பேட்டி உங்களுக்காக தமிழில்… ( தொடர்ச்சி)
சிமி: உங்களுடைய அம்மா ஒரு நடிகை என்பதற்காக, பள்ளியில் உங்களுடன் படித்த சகமாணவிகள், உங்களை கேலி செய்திருக்கிறார்களா ?
ஜெ: ஆம். மேல்தட்டு குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் சிலர், அப்படி கேலி செய்தது உண்டு. என் அம்மா, முன்னணி நடிகை அல்ல. அம்மா அப்போது குணச்சித்திர காதாபாத்திரத்தில்தானே நடித்தார். அதனால் அந்த மாணவிகள் என்னை கிண்டல் செய்தார்கள். ஒருவேளை அவர் முன்னணி கதாநாயகியாக இருந்தால், அவர்கள் என்னைப் பார்த்து பொறாமைப்பட்டிருப்பார்கள்.
அதை எல்லாம் சரிக்கட்டும்விதமாக, அனைத்து பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெறும் மாணவியாக நான் விளங்கினேன். நான் பள்ளி முடித்து சென்றபோது அனைத்து ஆசிரியர்களும் எனக்கு ஒருமனதாக “Best outgoing student of the year” பட்டம் அளித்தார்கள். என் வாழ்வில் நான் மிகப்பெருமையாக உணர்வதும், இதுவரை பெருமைப்படுவதும் அதற்காகத்தான்.
ஆனால் அப்போதெல்லாம், இந்த கிண்டல்களைக் கேட்டு, உடைந்து போய் அழுதது உண்டு. ஆனால் இப்போது அப்படி இல்லை. என்னை கேலி செய்பவர்களுக்கு திருப்பி கொடுக்க கற்றிருக்கிறேன். சில நேரங்களில், அவர்கள் கேலி செய்ததற்கு அதிகமாகவே திருப்பி அடிக்கிறேன்.
சிமி: உங்களுடைய 23 வயதில், நீங்கள் அம்மாவை இழந்துவிட்டீர்கள். அந்த சூழலை எப்படி எதிர்கொண்டீர்கள்?
ஜெ: அம்மாதான் என்னுடைய முழு உலகமும். அவர் என்னைப் பாதுகாத்தாரே தவிர, வேறு எதையும் எனக்கு சொல்லித்தரவில்லை. அவர் இறந்தபோது, கண்ணைக் கட்டி காட்டுக்குள் விடப்பட்ட ஒரு சிறு குழந்தையைப் போல, திணறிப்போனேன். எனக்கு குடும்பத்தை நிர்வகிக்கத் தெரியவில்லை. வங்கிக்கணக்கு பற்றியோ, காசோலையில் கையெழுத்து போடுவது பற்றியோ, வருமான வரி கட்டுவது பற்றியோ… ஏன் ? என் வீட்டில் எத்தனை பணியாளர்கள் இருக்கிறார்கள் என்பது பற்றியோ, எதுவுமே தெரியவில்லை. நான் என்ன சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன் என்று கூட எனக்குத் தெரியாது. மிகுந்த அப்பாவியான குழந்தை ஒன்றை கண்ணை கட்டி காட்டுக்குள் விட்டுவிட்டதை போலதான் உணர்ந்தேன்.
கையறு நிலையிலான அன்றைய சூழ்நிலையில் வெகுளியான, எளிதில் காயப்படக்கூடிய, அப்பாவி பெண்ணாக இருந்தேன். சுற்றி இருந்த அத்தனை பேருமே என்னை பயன்படுத்திக்கொண்டார்கள்.
சிமி: 120 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறீர்கள். உங்கள் திரையுலக வாழ்க்கை எப்படி இருந்தது ?
ஜெ: சிறப்பாக இருந்தது. என்னுடைய காலத்தில் நான் தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகையாக இருந்திருக்கிறேன். எனக்கு திரைத்துறை பிடிக்கவில்லை என்றாலும், ஏற்றுக்கொண்ட பொறுப்பில் சிறந்தவிளங்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
அதேபோல, அரசியல் எனக்கு பிடிக்காவிட்டாலும் நான் ஒரு வெற்றிகரமான அரசியல் தலைவர் என்று மக்கள் கூறுகிறார்கள். என்னை பார்த்து நானே ஆச்சரியப்படும் விஷயம் இது.
சிமி: நடனம் ஆடுவது, ஒப்பனை செய்வது, ஒத்திகை பார்ப்பது, இப்படியான திரைத்துறை பணிகள் உங்களுக்கு பிடித்திருந்ததா ?
ஜெ: பிடித்தது என்று சொல்ல மாட்டேன். ஆனால் நடிப்பு எனக்கு இயற்கையாவே வந்தது. என்னை ஒரு பிறவி நடிகர் என்றுதான் சொல்லவேண்டும். யாரையும் இமிடேட் செய்து நான் நடிக்க முயன்றதே இல்லை.
சிமி: நீங்கள் கான்வென்ட்டில் படித்தீர்கள். அப்போது பள்ளி மாணவிகளுக்கே உரிய இயல்பான கனவுகளோ, ஈர்ப்புகளோ உங்களுக்கு இருந்தனவா?
ஜெ: இல்லாமல் எப்படி? கிரிக்கட் வீரர் நாரி காண்டிராக்டர் மீது எனக்கு மிகப்பெரிய ஈர்ப்பு இருந்தது. சென்னையில் டெஸ்ட் கிரிக்கெட் நடைபெறும் போது, அவரைப் பார்ப்பதற்காக மட்டுமே சென்றது உண்டு.
ஹிந்தி நடிகர் ஷம்மி கபூர் மீதும் கூட எனக்கு ஈர்ப்பு இருந்தது. அவர் நடித்த “ஜங்லி” திரைப்படம் , தற்போது வரை எனக்கு மிகவும் பிடித்த படம்.”
(சொல்லிவிட்டு “ஆஜா சனம்” என்ற பிரபல ஹிந்திப்பாடலை சிறு வெட்கத்துடன் பாடுகிறார் ஜெ.!)
(தொடரும்)
பேட்டியின் முதல் பாகம்: ஜெயலலிதா பேட்டியின் முதல் பாகம்..
வீடியோ லிங்க்:
https://www.youtube.com/watch?v=DzqLo_1SPZg
https://www.youtube.com/watch?v=DzqLo_1SPZg
https://www.youtube.com/watch?v=Cf2bU9xD-3E