சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று திடீரென தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், அவசியம் ஏற்பட்டால் மக்கள் நலனுக்காக தே.மு.தி.க. வுடன் இணைந்து போராடுவோம் என்றார்.
அவரது இந்த பேச்சு, அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக சு.திருநாவுக்கரசர் பொறுப்பேற்ற பிறகு, மரியாதை நிமித்தமாக அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து வருகிறார்.
நேற்று மதியம் 1.40 மணியளவில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை, கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் சந்தித்தார். சுமார் ½ மணி நேரம் இருவரும் பேசினார்கள்.
இந்த சந்திப்பின் போது, தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர்கள் கீழானூர் ராஜேந்திரன், சிரஞ்சீவி, மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் அஷலாம் பாஷா ஆகியோர் உடன் இருந்தனர்.
விஜயகாந்தை சந்தித்து விட்டு வெளியே வந்த சு.திருநாவுக்கரசர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை மரியாதை நிமித்தமாக, நட்பு ரீதியில் சந்தித்தேன். அப்போது உள்ளாட்சி தேர்தல் மற்றும் தற்போது இருக்கிற பொதுவான அரசியல் விஷயங்கள் குறித்து பேசினோம்.
தற்போது நாடாளுமன்ற தேர்தலோ, சட்டமன்ற தேர்தலோ நடைபெறவில்லை. கூட்டணி குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை.
தே.மு.தி.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து இருக்கிறார்கள். காங்கிரசை பொறுத்தவரையில் தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதற்குள் உள்ளாட்சி தேர்தலுக்கு நீதிமன்றம் தடை விதித்து விட்டது.
உள்ளாட்சி தேர்தல் குறித்த வழக்குகள் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தேர்தல் தேதி முறையாக அறிவிக்கப்பட்ட பிறகு இது சம்பந்தமான பேச்சுவார்த்தை மேலும் தொடரும்.
17, 18-ந் தேதிகளில் விவசாயிகள் அறிவித்துள்ள போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் கன்னியாகுமரி மாவட்டத்தில் பங்கேற்கிறார். அதே போன்று முன்னணித் தலைவர்கள் ஆங்காங்கே நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்பார்கள்.
இது விவசாயிகள் சம்பந்தபட்ட பிரச்சினை என்பதால், தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
எதிர்காலத்தில், மதுவிலக்கு போன்ற போராட்டங்கள் வரும் போது, அதற்கான தேவை ஏற்படும் போது அவசியம் ஏற்பட்டால், மக்கள் நலனுக்காக தே.மு.தி.க.வுடன் இணைந்து ஒரே களத்தில் நின்று போராட்டம் நடத்துவோம்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பூரண குணம் அடைய வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் வேண்டுகிறோம். அவரை பற்றி வதந்திகளை யார் பரப்பினாலும், அது தவறு.
வதந்தியை பரப்புபவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதில் தவறு இல்லை. ஆனால், அந்த நடவடிக்கைகள் கட்சி கண்ணோட்டத்தோடு இருக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள உள்ளாட்சி தேர்தலில், காங்கிரசுக்கு திமுக சரியான முறையில் இடங்களை பகிர்ந்து அளிக்க வில்லை என்று திமுக மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இடையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல்நிலை குறித்து விசாரிக்க அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி சென்னை வந்தது திமுகவுக்கு அதிருப்பதியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் திருநாவுக்கரசர் விஜயகாந்தை சந்தித்து இருப்பதும், தேவைப்பட்டால் இணைந்து போராடுவோம் என்று அறிவித்திருப்பதும் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.