வரலாற்றில் இன்று: கே.ஏ.தங்கவேலு நினைவு தினம்!
டணால் கே.ஏ. தங்கவேலு
நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலு “கலைவாணர்” என்.எஸ். கிருஷ்ணன் நாடகக் குழுவில் பட்டை தீட்டப்பட்டவரான கே.ஏ. தங்கவேலு, நகைச்சுவை நடிப்பிலும், குணச்சித்திர நடிப்பிலும் கொடி கட்டிப் பறந்தார்.
தங்கவேலுவின் சொந்த ஊர் காரைக்கால். 10 வயதிலேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.
யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நாடகக் குழுவில் நடிக்கத் தொடங்கி, பல நாடகக் கம்பெனிகளில் நடித்த பின்பு என்.எஸ்.கிருஷ்ணனின் நாடகக் குழுவில் நடித்தார். இவர் நடித்த முதல் படம் எம்.ஜி.ஆர். நடித்த “சதிலீலாவதி”. அடுத்து என்.எஸ்.கிருஷ்ணனின் “பணம்” என்ற படத்தில் நடித்து புகழ் பெற்றார். “சிங்காரி” என்ற படத்தில் டணால்… டணால்… என்று அடிக்கடி கூறி நடித்ததால் டணால் தங்கவேலு என்று அழைக்கப்பட்டார்.
எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த “அமரகவி”யில், கலைவாணருடன் இணைந்து நகைச்சுவை விருந்தளித்தார்.
நாடக மேடையிலிருந்து திரைக்கு வந்த நகைச்சுவை நடிகர்களில் கே.ஏ.தங்கவேலு வசன உச்சரிப்பாலும் விழி அசைவுகளாலும் ரசிகர்களைக் கவர்ந்தவர். ‘டணால்’ தங்கவேலு என அழைக்கப்பட்டவர். சந்திரபாபு புகழ் பெற்றிருந்த காலத்திலும் பின்னர் நாகேஷ் கோலோச்சிய காலத்திலும் தனது நகைச்சுவைக்கெனத் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தவர் தங்கவேலு.

“எழுத்தாளர் பைரவன் நீங்கதானே?”
“சாட்சாத் நான்தான்”
“போராட்டம்னு ஒரு கதை எழுதுனீங்களே?”
”ஆமா.. அது பெரிய போராட்டமாச்சே.”
“அதிலே ஏன் சார் கடைசியா கதாநாயகி செத்துப்போனா?”
“கடைசியாத்தானே செத்தா.. அவ தலைவிதி செத்தா. ஆளை விடுங்க” இப்படி பல நகைச்சுவை வசனங்களை பேசி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தங்கவேலு.
‘கல்யாணப் பரிசு’ படத்தில் மன்னார் அண்ட் கம்பெனி மேனேஜர், எழுத்தாளர் பைரவன் என்று ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்திலேயே கலர் கலராக நகைச்சுவை ரீல் விட்டு கலக்கியவர். ‘அறிவாளி’, ‘கைதி கண்ணாயிரம்’ ‘எங்க வீட்டுப் பிள்ளை’ போன்ற படங்களிலும் தங்கவேலுவின் நகைச்சுவை பெரிதும் கவர்ந்தது.
தில்லானா மோகனாம்பாள் படத்தில் நட்டுவாங்கக்காரராக நடித்திருப்பார். சிவாஜி ட்ரூப்பில் பாலைய்யாவின் கலக்கல் என்றால், பத்மினி ட்ரூப்பில் தங்கவேலு கலக்குவார். தங்கவேலும் அவர் மனைவியும் நடிகையுமான எம்.சரோஜாவும் பல படங்களில் இணைந்து நடித்து கலகலப்பாக்கினர்.
இன்று அவரது நினைவு தினம்.
Patrikai.com official YouTube Channel