காவிரியில் அணை, பாலாறில் தடுப்பணை என்று தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை பறிக்கும் செயலில் கர்நாடக ஆந்திர மாநிலங்கள் ஈடுபட்டு வருகின்றன.
இது குறித்து கேள்வி எழுப்பனால், “எங்கள் மாநிலத்தில் உருவாகும் ஆறு எங்களுக்கே சொந்தம்” என்கின்றன.  ஆனால் உலகம் முழுவதுமே ஆற்று நீரின் அதிக உரிமை, கீழ்ப்பாசன விவசாயிகளுக்கே உண்டு என்பதே நடைமுறை, சட்டம்.  ஆனால் இம் மாநிலங்கள் அதை மதிப்பதில்லை.
மேலும், நதி நீர் ஒப்பந்தம், உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றையும் இம் மாநிலங்கள் பொருட்படுத்துவதே இல்லை.
இந்த வரிசையில் கேரளாவும் சேர்ந்திருக்கிறது. கேரளாவில் இருந்து வரும்  சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் முயற்சியில் கேரளா ஈடுபட்டிருக்கிறது.
siruvani-river
இதில் இன்னொரு கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், சிறுவாணி ஆறு, தமிழகத்தில்தான் உற்பத்தி ஆகிறது.
அது குறித்து பார்ப்போம்.
நீலகிரி மாவட்டம், குந்தா அருகே உள்ள, அமைதி பள்ளத்தாக்கு பகுதியில், சிறுவாணி ஆறு உற்பத்தியாகிறது. அட்டப்பாடி, அகழி வழியாக கேரளா சென்று, முக்காலி என்ற இடத்தின் அருகே, தமிழக எல்லைக்குள் வருகிறது, சிறுவாணி ஆறு.
கேரள மாநில எல்லையில் உள்ள, சிறுவாணி அணையில் இருந்து, கோவை மாவட்ட  மக்களுக்கு, குடிநீர் அளிக்கப்படுகிறது. சிறுவாணி அணையை, கேரள பொதுப்பணித் துறை பராமரித்து வந்தாலும், அதற்கான செலவுத் தொகையை, தமிழக அரசு அளித்து வருகிறது.
சிறுவாணி அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர், சிறுவாணி ஆற்றில் கலந்து, 15 கி.மீ., துாரம், கேரள வனப்பகுதி வழியாக ஓடுகிறது; இந்த ஆற்றில், நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி யாகும், சில கிளை நதிகளும் கலக்கின்றன. சிறு வாணி ஆறு, முக்காலி என்ற இடத்தின் அருகே, பவானி ஆற்றில் சங்கமிக்கிறது.
இந்த பகுதியில் அணை கட்ட, கேரள அரசு சில ஆண்டுகளுக்கு முன் முயற்சி மேற்கொண்டது; தமிழக விவசாயிகளின் கடும் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக, அந்த முடிவை கேரள அரசு கைவிட்டது. இப்போது அட்டப்பாடியில், அணை கட்டும் முயற்சிகளை துவக்கி உள்ளது.
இதற்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ள, அனுமதி
அளித்துவிட்டது.
இந்த அணையை கேரள அரசு கட்டினால், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். அதோடு, விவசாயமும் பாதிக்கப்படும்.
ஏற்கெனவே காவிரியின் குறுக்கே புதிய அணைகட்ட கர்நாடக அரசும், பாலாற்றின் குறுக்கே பல தடுப்பணைகளை கட்ட ஆந்தி அரசும் முடிவு செய்து பணிகளை துவக்கியுள்ளன.
download
இப்படி, பக்கத்து மாநிலங்கள் மூன்றும், நதிகளின் குறுக்கே, அணை கட்டினால், தமிழகத்தில், 15 மாவட்டங்களில்  தண்ணீருக்கு கடும் பாதிப்பு ஏற்படும்.
இதில் கொடுமை என்னவென்றால், “மூன்று மாநிலங்களும், தமிழகத்திற்கு வரும்  நதிகளில், தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல், எந்தவித கட்டுமானப் பணிகளையும்  மேற்கொள்ளக் கூடாது” என்று நதி நீர் ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கிறது.
ஆனால் அதை மீறி மூன்று மாநிலங்களும் அணை கட்ட முயற்சிக் கின்றன.
கேரளாவின் முயற்சியை தடுக்கக்கோரி, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருக்கிறார். அதோடு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி இப்பிரச்சினயை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்த வேண்டு்ம் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.