சென்னை:
மருத்துவ படிப்புக்கான சீட்டுகளை விற்ற விவகாரம் தொடர்பாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினரால் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தரும், அகில இந்திய ஜனநாயக கட்சி தலைவரும், புதிய தலைமுறை கட்சி நிறுவனருமான பாரிவேந்தர் பச்சமுத்து இன்று காலை கைது செய்யப்பட்டார்.
பச்சமுத்துவிடம், கடந்த இரண்டு நாட்களாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்த நிலையில், குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதால் இன்று காலை செய்து செய்யப்பட்டார். அவர்மீது 406 & 420 IPC பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள பச்சமுத்து முதலில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதல்கட்ட பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் சேர மாணவர்களிடம் பல கோடி ரூபாய் வசூலித்த, பச்சமுத்துவின் பினாமி என கருதப்படும் மதன் என்பவர் கடந்த மே மாதம் 29-ம் தேதி தலைமறைவானார்.
இதற்கிடையே, அவர் எழுதியக கடிதம் ஒன்று வெளியானது. அதில், மருத்துவ சீட்டுக்கு மாணவர்களிடம் பணம் பெற்றது குறித்தும், பணத்தை பச்ச முத்துவிடம் ஒப்படைத்து விட்டதாகவும் கடிதத்தில் எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து மதன் மாயமானார். இதுவரை அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை.
இதையடுத்து 72.5 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு தலைமறைவான மதனைக் கண்டுபிடிக்கக் கோரி பாதிக்கப்பட்ட 109 மாணவர்கள் சார்பாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதில் 14 பேர் இது குறித்தும், பணத்தை மீட்க கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
ஐகோர்ட்டு விசாரணையை தொடர்ந்து, தமிழக அரசு விசாரணை மேற்கொண்டது, முதன் முதலாக பச்சமுதது நடத்தி வரும் கட்சியான, இந்திய ஜனநாயக கட்சி மாநில மருத்துவர் அணிச் செயலாளர் பார்க்கவன் பச்சமுத்து, மதுரை மாவட்டச் செயலாளர் சண்முகம், திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் பாபு, மதனின் நண்பர் விஜய பாண்டியன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மதனை கண்டுபிடிக்க ஐகோர்ட்டு சென்னை காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்தது. மேலும் , இந்த வழக்கு தொடர்பாக எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்துவிடம் ஏன் விசாரிக்கவில்லை என கேள்வி எழுப்பினர்.
இதன் காரணமாக, சென்னை எழும்பூரில் உள்ள மத்தியக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் கூடுதல் துணை ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்துவிடம் கடந்த இரண்டு நாட்களாக விசாரணை மேற்கொண்டார்.
மதன் மாயமானது தொடர்பாகவும், எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லுாரியில் சீட் வாங்கித்தர பணம் பெற்றது தொடர்பாகவும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளது விசாரணையில் தெரியவந்ததால், இன்று காலை பச்சமுத்து கைது செய்யப்பட்டார்.