சென்னை:
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 5 பேர் பலியாகி உள்ளதாக பா.ம.க. ராமதாஸ் கூறி உள்ளார்.
தமிழகத்தில் கொசுவால் அவ்வப்போது டெங்கு காய்ச்சல் வருவது வழக்கமாகி உள்ளது. அரசு போதிய முன்னெச்சரிக்கை எடுக்காமல், டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு பலர் உயிரிழந்தபிறகே நடவடிக்கைககளை மேற்கொண்டு வருகிறது-
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 பேர் பலியாகியுள்ளனர். இதற்கு தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புகளுடன் மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வரு கின்றனர்.
பொள்ளாச்சியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்ற 62 வயது முதியவர் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் இம்மாதத் தொடக்கத்தில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பயனில்லாத நிலையில் கடந்த 6-ஆம் தேதி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு, அதற்கான சிகிச்சைகள் தொடங்கப்பட்ட நிலையில், அதனால் பயனின்றி கடந்த 13ஆம் தேதி உயிரிழந்தார். அப்பகுதியைச் சேர்ந்த மேலும் சிலரும் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த காவேரிராஜபுரத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அப்பகுதியிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் மருத்துவம் பெற்று வருகின்றனர். உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்ட பல சிறுவர்கள் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
அவருக்கு அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பயனில்லாமல் யுவராஜ் என்ற 4 வயது குழந்தை கடந்த 13-ஆம் தேதியும், அதே வயதுள்ள சந்தோஷ் என்ற குழந்தை கடந்த 18&ஆம் தேதியும் உயிரிழந்தன. அவர்களைத் தொடர்ந்து நேற்று மோகன் குமார் என்ற 5 வயது சிறுவனும், மோகன் என்ற 9 வயது சிறுவனும் நேற்று காலை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உயிரிழந்தனர். அவர்கள் டெங்கு காய்ச்சலால் தான் உயிரிழந்தனர் என்பதை மருத்துவர்கள் தனிப்பட்ட முறையில் ஒப்புக் கொள்ளும் போதிலும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கத் தயங்குகின்றனர். அவர்களின் கைகள் ஆட்சியாளர்களால் கட்டிப் போடப்பட்டிருக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை டெங்கு காய்ச்சல் என்பது தமிழகத்தில் மருத்துவர்களைத் தவிர வேறு எவராலும் அறியப்படாத பெயராக இருந்து வந்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் டெங்கு காய்ச்சலால் கணிசமான எண்ணிக்கையிலானவர்கள் உயிரிழப்பது வாடிக்கையாகி விட்டது.
இதற்கு தமிழக அரசின் சுகாதாரத் துறை தான் பொறுப்பேற்க வேண்டும். டெங்கு காய்ச்சலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் எதையும் தமிழக ஆட்சியாளர்கள் செய்வதில்லை. டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகரித்து உயிரிழப்புகள் பெருகத் தொடங்கியவுடன் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விளம்பரப்படத்தை, அதுவும் முதலமைச்சர் ஜெயலலிதா புகழ்பாடும் வசனங்களுடன் ஒளிபரப்புவதுடன் தமிழக அரசு அதன் கடமையை முடித்துக் கொள்கிறது.
வீடுகளில் நல்ல நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கும் அரசு, அதை ஒருபோதும் கடைபிடிப்பதில்லை. அரசு அலுவலகக் கட்டிடங்களிலும், பொது இடங்களிலும் நன்னீர் தேங்கி, டெங்குக் காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் அதிக அளவில் பெருக காரணமாக உள்ளன. மழை காரணமாக சேரும் நன்னீர் முறையாக வழிந்தோடுவதற்கு வகை செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், சாலைகள் உள்ளிட்ட அரசு கட்டிடங்கள் முறையாக அமைக்கப்படாததன் காரணமாக எல்லா இடங்களிலும் நன்னீர் தேங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தனியார் கட்டிடங்கள், பொதுமக்களின் வீடுகள் ஆகியவற்றில் நன்னீர் தேங்கியிருக்கிறதா? என்பதை ஆய்வின் மூலம் கண்டறிவதற்கு அரசு நடவடிக்கை எடுக்காததும் டெங்கு உருவெடுக்க காரணமாகும்.
இந்தியா விடுதலை அடைந்து 69 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் உயிரிழப்பது மிகப்பெரிய அவலம் ஆகும். மக்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை சூழலை அளிக்க தமிழக ஆட்சியாளர்கள் தவறி விட்டனர் என்பதையே டெங்கு உயிரிழப்புகள் காட்டுகின்றன. கடந்த சில ஆண்டுகளில் டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில் அதிகம் பேர் உயிரிழந்ததைப் போன்று இந்த ஆண்டும் நடக்காமல் தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
முதல் நடவடிக்கையாக தமிழகத்தில் டெங்குக் காய்ச்சல் பரவுவதை தமிழக அரசு வெளிப்படையாக ஒப்புக் கொள்ள வேண்டும். அதேபோல், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை அனைத்து இடங்களிலும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கவும், மருத்துவ ஆய்வுகளை செய்யவும் தேவையான ஏற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
டெங்கு அறிகுறிகள் காணப்பட்டால், உடனடியாக செய்ய வேண்டியது என்ன? என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் பதற்றம் அடையத் தேவையில்லை. டெங்கு காய்ச்சலுக்கு முறையாக சிகிச்சை எடுத்துக்கொண்டால் எளிதில் குணமடைந்து விடலாம். பப்பாளி இளைச்சாறு, மலை வேம்பு சாறு ஆகியவற்றை காய்ச்சி குடிப்பதன் மூலமும், நில வேம்பு கசாயத்தை அருந்துவதன் மூலமும் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும்; குணப்படுத்தவும் முடியும் என்பது தான் மருத்துவர் என்ற முறையில் மக்களுக்கு நான் சொல்ல விரும்பும் செய்தியாகும்.
அதுமட்டுமின்றி, கடந்த சில ஆண்டுகளில் செய்யப்பட்டதைப் போலவே இந்த ஆண்டும் தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் நிலவேம்பு மற்றும் நிலவேம்பு கசாயம் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்”
இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.