தூத்துக்குடி:
தலைமையாசிரியர் பணியிடமாற்றத்தில் வேறு ஊருக்குச் சென்றதால், பள்ளி மாணவர்கள் கதறி அழுத நெகிழ்வான சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்தது.
தூத்துக்குடி அருகே உள்ள மேலத்ததட்டப்பாறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த 7 வருடங்களாக தலைமையாசிரியராக பணியாற்றிவந்தவர் எஸ்.வெங்கட மத்வராஜ்.
மாணவர்களிடம் அன்பையும் கண்டிப்பையும் ஒருங்கே கொடுக்கக்கூடியவர். பாடங்களில் மட்டுமின்றி பாடல், விளையாட்டு போன்றவற்றிலும் மாணவர்கள் சிறக்க வேண்டும் என்று ஊக்கம் கொடுப்பவர். ஆகவே இவர் மீது மாணவர்களுக்கு மிகுந்த பிரியம்.
கடந்த வாரம் நடந்த கவுல்சிலிங்கில், உடன்குடி ஓன்றிய கூடுதல் கல்வி அலுவலராக எஸ். வெங்கட மத்வராஜ் நியமிக்கபட்டார்.
இதையடுத்து மாணவர்களிடமிருந்து விடை பெறுவதற்காக பள்ளிக்குச் சென்றார். ஆனால் விசயம் அறிந்த மாணவர்கள், “நீங்கள் போக வேண்டாம். இங்கேயே இருங்க சார்” என்று குரல் கொடுக்க தொடங்கினர். அதற்கு மத்தவராஜ், ‘அடுத்த வருடம் இப்பள்ளிக்கு மீண்டும் வருவேன்’ என்று சமாதானம் கூறி கிளம்பினார்.
அவரை வழிமறித்த மாணவர்கள், ‘போகாதீங்க சார்: என கெஞ்சினர். சில மாணவிகள் கதறி அழும் ஆரம்பித்தனர். அவர்களை, உதவி ஆசிரியர் சாமிநாதன் சமாதானம் செய்து பள்ளிக்குள் அழைத்து சென்றார்.
பின்னர் காரில் ஏறி புறப்பட்ட லெங்கட மத்வராஜை, அங்கிருந்த பொதுமக்கள் சந்தித்து பேசி கொண்டிருந்தனர். அந்நேரத்தில் வகுப்பறைக்குள் இருந்த மாணவ, மாணவிகள் பூட்டியிருந்த மற்றொரு வாசலின் கம்பிகள் வழியே பார்த்து அழுதவாறு “போகாதீங்க சார்”என்று மீண்டும் குரல் கொடுத்தனர். அப்போது மத்வராஜ் கண்களிலும் கண்ணீர் தழும்பியது. அவரைப் பார்த்த மற்ற ஆசிரியர்களும் கண் கலங்கினார்கள்.
ஒரு நல்லாசிரியர், தாய், தந்தையருக்கு சமம் என்பார்கள். மத்தவராஜ் அப்படிப்பட்ட ஆசிரியர் என்பதை மாணவர்களின் பாசம் வெளிப்படுத்தி இருக்கிறது.