சென்னை:
தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் காமிராக்கள் பொருத்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் அடிக்கடி நடைபெறும் “லாக்கப் டெத்”, லஞ்ச முறைகேடு, மனித உரிமை மீறல்கள் மற்றும் பொதுமக்கள் புகார் அளித்தால் அதை வாங்காமல் அவர்களை மிரட்டுவது, ஒருதலை பட்சமாக செயல்படுவது என பல்வேறு புகார்கள் காவல்துறையினர் மீது வந்தன.
இதுபற்றி சமுக ஆர்வலர் ஒருவர் வழக்கு தொடுத்ததின் பேரில், இதுபோன்ற புகார்களை வருங்காலத்தில் தடுக்கும் பொருட்டு, அனைத்து காவல் நிலையங்களிலும் காமிராக்கள் பொருத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், உயர்நீதி மன்ற உத்தரவு வந்து 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ஒருசில காவல்நிலையங்களில் மட்டுமே காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
உயர்நீதி மன்ற உத்தரவு வந்தவுடனே , போலீஸ் நிலையங்களில் காமிராக்கள் பொருத்துவதற்காக தமிழக அரசு ரூ.1.75 கோடி ஒதுக்கீடு செய்ததது. இதன் காரணமாக ஒரு சில காவல் நிலையங்களில் மட்டும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. பெரும்பாலான காவல்நிலையங்களில் காமிராக்கள் பொருத்தப்படவில்லை. அதன்பிறகு இதற்கென எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மொத்தம் 1567 காவல்நிலையங்கள் உள்ளன. அத்தனை காவல்நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகளை அரசு விரைவுப்படுத்த வேண்டும் என பொதுமக்களும், சமுக ஆர்வர்களுக்கும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.