சென்னை
ரும் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தமிழ்நாடு தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.
தமிழக உள்ளாட்சி தேர்தலுக்காக  183 கோடி ரூபாயை  ஒதுக்கியுள்ளதாக தமிழக அரசு பட்ஜெட்டில்  தெரிவித்து உள்ளது.
இந்தியாவிலே, முதன்முதலாக தமிழகத்தில்தான் உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 50 சதவிதம் இடஒதுக்கீடு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

வேலூரில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனை கூட்டம்
வேலூரில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனை கூட்டம்

இதற்கான நடவடிக்கையாக தமிழ்நாடு தேர்தல் கமிஷன்  மாவட்டம்தோறும்,  மாவட்ட கலெக்டர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை, நகர்ப்புற வளர்ச்சி துறை, நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பெண்களுக்கான இடஒதுக்கீடு பட்டியல் தயாராகிகொண்டு இருப்பதாகவும், பெண்கள் அதிகமாக உள்ள வார்டுகளை பெண்களுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் பெண்கள் வார்டுகள்  விவரம் பற்றிய பட்டியல்  வெளியிடப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் கூறினார்.
தமிழகம்  முழுவதும்   1,46,478  உள்ளாட்சி  பதவிகள் உள்ளன.  இதில் 50 சதவித பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
சட்டசபை கூட்டம் முடிந்தபிறகு நடைபெறும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூட்டத்தில் இதுபற்றி ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்பபடும். அதன்பிறகு அரசு ஒப்புதல் பெற்று பட்டியல் வெளியிடப்படும்.
இதுகுறித்து மாநில தேர்தல் கமிஷன் செயலாளர்  ராஜசேகர்  அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்  தேர்தல்களை,  கட்சி அடிப்படையிலும், கிராம  ஊராட்சி தலைவர்  மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல்களை  கட்சி சார்பின்றியும்  நடத்த அரசு உறுதி செய்துள்ளதாகவும், அதற்கேற்றவாறு தேர்தல்களை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி கூறப்பட்டு உள்ளது.