இன்று: ஜூலை 28: உலக இயற்கைவளம் பாதுகாப்பு நாள்
“இயற்கை” என்பது நமக்குக் கிடைத்த அருட் கொடை நமக்கு தூய காற்றையும், நீரையும் வழங்குவதோடு உணவு, உடை, உறைவிடத்திற்குத் தேவையான அத்தனை மூலப்பொருட்களையும் அளித்து நம்மை வாழ்விக்கிறது.
ஆனால், இப்படிப்பட்ட இயற்கையை அழித்துக்கொண்டிருக்கிறோம் என்பதுதானே வேதனையான உண்மை?
19ம் நூற்றாண்டிலும், அதன் பிறகு நடந்த உலகப் போர்கள், தொழிற்புரட்சி, நவீன வசதிகள் என்ற பெயரில் வந்த கருவிகள் ஆகியவற்றால் சுற்றுச்சூழல் பாதிக்கப்டுகிறது. இதன் விளைவாக தற்போது அமில மழை, பாலைவனமாதல், உலக வெப்பநிலை மாறுபாடு, ஓசோன் படலம் பாதிப்பு, கதிரியக்கம், உயிர்களின் அழிவு போன்றவை ஏற்படுகின்றன.
காற்று மாசு:
காற்றில் கலந்துள்ள நச்சுக்களையும் அவற்றினால் ஏற்படும் தீமைகளும் பின்வருமாறு.
நைட்ரஜன் ஆக்சைடு வாயு – சுவாசக் குழாய், நுரையீரல் பாதிப்பு
சல்பர் ஆக்சைடு வாயு – இதய உபாதை, தலைவலி, வாந்தி
கார்பன் மோனாக்சைடு – ஆக்சிஜனை கெடுத்து ரத்தப் பண்பு குறைத்தல்
அம்மோனியா – மூச்சுக் குழாய் புண்
நைட்ரஜன் சல்பேட் – கண், தொண்டை எரிச்சல், மயக்கம்
நைட்ரோ பினால் – இரத்தப் புற்றுநோய்
இன்னும் இது போன்ற ஏராளமான நச்சுக்கள் காற்றில் கலந்து மனிதனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகளை உருவாக்குகின்றன.
.நீர் மாசு
மாசுபட்ட நீரை, அதன் வாசனை, சுவை, கலங்கல், நிறம் ஆகியவற்றின் மூலம் உணரலாம். நாம் அனைவரும் நிலத்தடி நீரையே சார்ந்து வாழ்கிறோம். ஆனால் இந்நீர் கசிவுக் குழிகள், ஆழமில்லாத சாக்கடைக்குழிகள், தொழிற்சாலைகள், உரக்குவியல், உரம், பூச்சிக்கொல்லித் தொழிற்சாலைகள், பெட்ரோலிய சுத்திகரிப்புகள், உருக்காலைகள், வேதியியல் தொழிலகங்கள் போன்ற காரணிகளால் பாதிப்படைந்துள்ளன.
மண் மாசு:
‘மண்’ என்ற சொல்லுக்கு புவி மூலப்பொருள் என்று அர்த்தம். கழிவு நீர் வாயுக்கள், தனிமங்களின் சிதைவு, வாகனக் கழிவுகள், பிளாஸ்டிக் தொழிற்சாலைக் கழிவுகள், மரத்தூள் போன்றவை மண்ணை மாசுபடுத்துகின்றன. மண்ணில் படிந்த மாசுக்கள் நச்சுக்களாக மாறுகின்றன. இது உணவுச் சங்கிலியால் பல்வேறு உயிரினங்களுக்கு உணவாக உட்கொள்ளப்படுவதால் நம்மால் அறியமுடியாத பல ஆபத்துகள் நேரிடுகின்றன.
கடல் மாசு:
உலகின் முக்கால் பகுதி நீரால் சூழப்பட்டது. . கடலில்தான் முதன் முதலாக உயிரினங்களின் தோன்றின என்ற ஒரு கூற்று நிலவுகிறது. இக்கடலால் நாம் பல வளங்களைப் பெற்று வருகிறோம். ஆனாலும் இதற்கு ஆபத்தை தொடர்ந்து நாம் விளைவித்தே வருகிறோம். ஆறுகளை மாசு செய்கிறோம், இந்த மாசடைந்த நீர் கடலில் கலந்து கடலும் மாசடைகிறது.
வீட்டு கழிவுகள், குப்பை கூலங்கள், வேளாண் கழிவுகள், தீங்குயிர் கொல்லிகள், பாதரசம் போன்ற கன உலோகங்கள், பெட்ரோலியக் கழிவுகள், கதிரியக்கக் கழிவுகளின் குவிப்பு போன்றவற்றை கடலில் தள்ளியும் கடலை மாசடைய வைக்கிறோம்.
இதனால் கடல் வாழ் உயிரினங்கள் ஆபத்திற்குள்ளாகின்றன. இதனை நம்பி வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
கதிர்வீச்சின் பாதிப்பு:
புறஊதாக்கதிர்கள், காஸ்மிக் கதிர்கள், நுண் அலை, கட்புலக் கதிர்கள் போன்ற கதிர்வீச்சுகள் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் முக்கியமாயனவை. இக்கதிர்கள் மனிதர்களின் மரபணுவையே பாதிக்கும் அளவிற்கு தீங்கானது. பொதுவாக காஸ்மிக் கதிர்வீச்சைக் காட்டிலும் ஓ கதிர்களிலிருந்து வெளிப்படும் 95மூ கதிர்வீச்சு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அணுகுண்டு, நைட்ரஜன் குண்டு, அணுக்கரு ஆற்றல் தொழில் நுட்பங்களும் சுற்றுச் சூழலை கெடுக்கின்றன.
கதிர்வீச்சினால் சுரங்கப் பணியாளர்கள் உள்ளிட்டோர் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். இக்கதிரியக்க மாசுபாட்டால் குறைப்பிரசவம், குழந்தைகள் செத்துப் பிறத்தல், பிள்ளைப்பேறு குறைதல், கண்புரை, வாய்ப்புண், இரத்தக் குழாய் பாதிப்பு, சருமத்தில் செம்புள்ளிகள், இரைப்பைக் குடல் பாதிப்பு, ரத்தப் போக்கு, எலும்பு மஜ்ஜை பாதிப்பு வயதுக்குப் பொருந்தாத மூப்பு, ஆயுள் குறைவு என்று பலவித பாதிப்புகள் மனித இனத்துக்கு ஏற்படுகின்றன.
தமிழ் இலக்கியங்களில் சுற்றுச்சூழல்
பற்பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மக்கள் சுற்றுச் சூழல் பாதுகாப்பில் முன்னோடியாக இருந்தார்கள். மரம், செடி, கொடிகளை போற்றி வந்தனர். அதை உணர்த்தும் விதமாக தமிழல் இலக்கியங்களில் பல எடுத்துக்காட்டுக்களைச் சொல்ல முடியும்.
அவ்வளவு ஏன்.. குப்பைகளை கண்ட இடத்தில் போடக்கூடாது என்பதைச் சொல்லும் பைந்தமிழ் பாடலும் உண்டு.
பெரும் பாணாற்றுப்படையில் ஒரு பாடல்… “இடுமுள் வேலி எடுப்படு வரைப்பின்” (பெரும் -154) என்று உண்டு. இது குப்பைகளை பொது இடங்களில் போடக்கூடாது என்பதையும், அதற்கென தனி இடத்தை ஒதுக்கி, அந்த இடத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலிகள் போடப்பட்டிருந்ததையும் சொல்கிறது.
மக்களின் வாழ்வும், தாழ்வும் ஐம்பூதமான இயற்கையை மையமாகக் கொண்டே அமைந்துள்ளதை நம் பண்டைத் தமிழர்கள் உணர்ந்திருந்ததை புறநானூற்றுப் பாடல் தெரிவிக்கிறது. வள்ளுவரும் இயற்கை சூழல் பற்றிச் சொல்லியிருக்கிறர்.
இப்படி நிறைய உதாரணங்களை பண்டை தமிழ் இலக்கியங்களில் எடுத்துக்காட்ட முடியும்.
ஆனால் தற்போது சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நமக்கு இல்லை என்பது வருத்தமான உண்மை. இது குறித்த கல்வி நமக்கு அவசியம்.
அதற்கு முன்பு ஒரு செயலைச் செய்வோம்..
பெரிதாக ஒன்றுமில்லை.. குறைந்தபட்சம் குப்பைகளை அதற்குரிய இடங்களில் போடுவோம். மக்கும், மட்காத குப்பைகளை பிரித்துபோடுவோம். நம் சுற்றுச் சூழல் அக்கறை, இதன் மூலம் துவங்கட்டும்.
-எஸ். யாழினி